தேனிலவு செல்ல எனது மகனுக்கு விருப்பமே இல்லை! இந்தூர் தொழிலதிபர் கொலையில் ட்விஸ்ட்!
டெல்லி: மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷிக்கு தேனிலவு செல்லவே விருப்பமில்லை என்றும் புதுமனைவி கட்டாயப்படுத்தியதால்தான் அவர் சென்றார் என்றும் ராஜாவின் தாய் பகீர் தகவலை அளித்துள்ளார்.
இதுகுறித்து ராஜாவின் தாய் உமா கண்ணீர் மல்க கூறியிருப்பதாவது: திருமணமான உடனேயே தேனிலவுக்கு செல்ல என் மகன் விரும்பவில்லை. ஆனால் தனது மனைவி சோனம், தேனிலவுக்காக மேகாலயாவுக்கு டிக்கெட் புக் செய்ததால் எனது மகன் புறப்பட்டுச் சென்றார்.

தேனிலவுக்குச் சென்ற இடத்திலேயே என் மகனை கொன்று விட சோனம் திட்டம் தீட்டி விட்டார். அதனால்தான் ரிட்டர்ன் டிக்கெட்டையே எடுக்கவில்லை. இந்த திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எங்களுடன் சோனம் நல்லபடியாகவே நடந்து கொண்டார். அவரது நடத்தையில் எந்த சந்தேகமும் இல்லை.
குவஹாத்தி
ராஜாவும் சோனமும் குவஹாத்தியில் உள்ள காமக்யா கோயிலுக்கு செல்ல திட்டமிட்டு திடீரென மேகாலயாவுக்கு மாற்றிவிட்டனர். "திருமணமான உடனேயே மேகாலயாவுக்கு ஹனிமூன் செல்ல எனது மகனுக்கு விருப்பமில்லை. டிக்கெட் புக் செய்துவிட்டதால் செல்வதாக" அவரே என்னிடம் தெரிவித்தார்.
மனைவியுடன் செல்ல அட்வைஸ்
நானும் உன் மனைவி ஆசையாக டிக்கெட்டை புக் செய்துவிட்டார். எனவே நீ அவருடன் செல்ல வேண்டும் என தெரிவித்தேன். மேலும் எனது மகன் , என்னிடம், "மேகாலயாவில் 6 முதல் 7 நாட்கள் வரை தங்கவிருப்பதால் சோனம் ரிட்டர்ன் டிக்கெட்டை புக் செய்யவில்லை" என்றும் என் மகன் தெரிவித்தார். சோனம் எனது மகனை விரும்பியிருந்தால் அவரை சாக விட்டிருக்க மாட்டார். ராஜ் குஷ்வாலா யாரென எனக்கு தெரியாது என ராஜாவின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
நடந்தது என்ன?
கடந்த மே 23 ஆம் தேதி மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மவ்லக்கியத் கிராமத்தில் உள்ள ஹோம்ஸ்டேவில் இருந்து வெளியேறிய புதுமணத் தம்பதிகளான ராஜா, சோனம் ஆகியோர் காணாமல் போனார்கள்.
தேனிலவுச் சென்ற தம்பதி
தேனிலவுக்குச் சென்ற இந்த தம்பதி காணாமல் போனதால் இந்த வழக்கை விசாரிக்குமாறு மேகாலயா அரசுக்கு, மத்திய பிரதேச அரசும், மத்திய அரசும் அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையை தொடங்கிய நிலையில் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு இடத்தில் அவர்கள் வாடகைக்கு இரு சக்கர வாகனத்தை எடுத்துள்ளனர்.
பைக் மீட்பு
அந்த இரு சக்கர வாகனம், மே 24 ஆம் தேதி சாலையோர ஓட்டல் அருகே கிடந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பெய்து வந்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அவர்களை தேடும் நடவடிக்கைகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
இந்தியில் பேசியது என்ன
இது குறித்த விசாரணையில் ஒரு சுற்றுலா வழிகாட்டி கூறுகையில், இந்த தம்பதி இந்தி பேசிக் கொண்டே யாரோ மூன்று பேருடன் மலையேறி நடந்து சென்றதை கண்டதாக தெரிவித்தார். இதன் மூலம் போலீஸார் ஒரு துப்பு கிடைத்தது. இதுகுறித்து பேசிய அந்த வழிகாட்டி ஆல்பர்ட் பிடே மேலும் கூறுகையில், "மூன்று பேருடன் பேசிக் கொண்டிருந்த ஆணின் பின்னால் அந்த பெண் சென்றார். எனக்கு இந்தி தெரியாது என்பதால் அவர்கள் என்ன பேசினார்கள் என புரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
200 அடி ஆழத்தில் உடல்
இதையடுத்து ஜூன் 2 ஆம் தேதி குப்பை கொட்டுவதற்கு பயன்படுத்தப்படும் 200 அடி பள்ளத்தாக்கில் இருந்து ராஜாவின் உடல் மீட்கப்பட்டது. மேலும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் அந்த உடல் அருகேயே கிடந்தது. கொலை நடந்த இடத்திற்கு அருகே ஒரு பெண்ணின் சட்டையும், அவர் பயன்படுத்திய ரெயின் கோட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
மனைவி சரண்
எனினும் அவரது மனைவி சோனமை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் சோர்வடைந்தனர். இந்த நிலையில் காசிபூர் மாவட்டத்தில் உள்ள நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் சோனம் ரகுவன்ஷி, சரணடைந்தார். அவருடன் மேலும் ஒருவர் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். அது போல் மத்திய பிரதேசத்திலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் பகீர்
கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். சோனம் போலீஸாரிடம் கூறுகையில், ராஜா ரகுவன்ஷியை விருப்பமின்றி திருமணம் செய்து கொண்டாராம். அவருடைய அப்பாவின் கடையில் வேலை செய்யும் ராஜ் குஷாலாவை அவர் காதலித்து வந்தாராம். சோனம் தனது கணவரை தேனிலவுக்கு அழைத்து வந்து ராஜ் குஷாலா உதவியுடன் கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியில் உலுக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications