"சுத்த பொய்.." ட்விட்டரை மூடுவோம் என அழுத்தம் கொடுத்ததாக ஜேக் டோர்சி புகாருக்கு மத்திய அரசு பதிலடி
டெல்லி: விவசாய போராட்டத்தின் போது இந்திய அரசிடம் இருந்து அழுத்தம் வந்ததாக ட்விட்டரின் முன்னாள் சிஇஓ ஜேக் டோர்சி தெரிவித்த நிலையில், இதற்கு மத்திய அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளான் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 2020இல் தொடங்கி ஓராண்டு தீவிர போராட்டம் நடத்தியிருந்தனர். உபி, பஞ்சாப், ஹரியானா உட்பட நாடு முழுக்க இருந்த விவசாயிகள் திரண்டு இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

தலைநகர் டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்குத் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அங்கே குடிசைகளை அமைத்த விவசாயிகள், சமைத்துச் சாப்பிட்டு அங்கேயே தீவிர போராட்டத்தை நடத்தினர்.
ஜேக் டோர்சி: சுமார் ஓராண்டாக அந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தொடக்கத்தில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்தே இந்த விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையே போராட்டம் நடந்த போது இந்திய அரசிடம் இருந்து கடும் அழுத்தம் வந்ததாக ட்விட்டரின் முன்னாள் சிஇஓ ஜேக் டோர்சி இன்று பரபர கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் அரசை விமர்சிக்கும் கணக்குகளை முடக்க இந்திய அதிகாரிகளிடம் இருந்து ட்விட்டருக்கு பல கோரிக்கைகள் வந்ததாக டோர்சி கூறினார். மேலும், கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால், நாட்டில் உள்ள ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என்று இந்திய அதிகாரிகள் மிரட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "அவர்கள் சொல்வதில் இருந்தே புரிந்து கொள்ள முடிந்தது. சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ட்விட்டர் அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு வரும்.. உங்கள் அலுவலகங்களை மூடிவிடுவோம் என்றார்கள். சிலரது வீடுகளில் ரெய்டையும் நடத்தினார்கள். ஆனாலும் இந்தியா ஜனநாயக நாடு" என்ற விமர்சித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பதிலடி: இந்தச் சூழலில் ஜேக் டோர்சி குற்றச்சாட்டுகளை மத்திய ஐடி துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "இது அப்பட்டமான பொய்.. அவர் ட்விட்டர் சிஇஓவாக இருந்த போது, அங்கிருந்த சந்தேகத்திற்குரிய ட்விட்டர் வரலாற்றை நீக்கும் முயற்சியாக இது இருக்கலாம்.
உண்மை என்னவென்றால் டோர்சிஸ் தலைமையிலான ட்விட்டர் இந்தியச் சட்டங்களைத் தொடர்ந்து மீறியது. உண்மையில் அவர்கள் 2020 முதல் 2022 வரை இந்தியச் சட்டத்திற்கு இணங்கவில்லை.. இறுதியாக ஜூன் 2022இல் மட்டுமே அவர்கள் சட்டத்திற்கு இணங்கினார்கள். ட்விட்டர் ஊழியர்கள் யாரும் சிறைக்குச் செல்லவில்லை. எந்தவொரு ட்விட்டர் அலுவலகம் மூடப்படவில்லை.
உரிமை உள்ளது: அவரது தலைமையிலான ட்விட்டர் நிர்வாகத்திற்கு இந்திய சட்டத்தை ஏற்பதில் சிக்கல் இருந்தது. அதற்கு இந்தியாவின் சட்டங்கள் பொருந்தாது என்பது போல் நடந்து கொண்டது. நாட்டில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் சட்டத்தைப் பின்பற்றுவதை உறுதி செய்யும் உரிமை இந்தியாவுக்கு உண்டு. ஜனவரி 2021இல் நடந்த போராட்டங்களின் போது, நிறையப் போலி செய்திகள் பரவின.. இனப்படுகொலை நடப்பதாக எல்லாம் போலி தகவல்களைப் பரப்பினர்.
போலி செய்திகளால் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் தளத்தில் இருக்கும் போலி தகவல்களை அகற்றுவது இந்திய அரசின் கடமையாகும். ஜாக் தலைமையில் ட்விட்டரில் பாரபட்சமாகவே நடந்து கொண்டது. அமெரிக்காவில் இதேபோன்ற நிகழ்வுகள் நடந்தபோது அவர்களே போலி செய்திகளை நீக்கினர். ஆனால், இந்தியாவில் போலி செய்திகளை நீக்குவதைப் பிரச்சினையாகப் பார்த்தார்கள்.
ரெய்டு இல்லை: உண்மை சொல்ல வேண்டும் என்றால் அப்போது எங்கும் ரெய்டு நடக்கவில்லை.. யாரும் சிறைக்கு அனுப்பப்படவில்லை. எங்கள் கவனம் இந்திய சட்டங்களை அவர்கள் இணக்குவதை உறுதி செய்வதில் மட்டுமே இருந்தது. ஜாக் ட்விட்டரில் இருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையாகப் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளார். அதற்கு இப்போது பல சான்றுகள் உள்ளன.
டோர்சி கீழ் இயங்கி ட்விட்டர் இந்தியச் சட்டத்தை மட்டும் மீறவில்லை.. ஆனால் நமது அரசியலமைப்பின் விதி 14,19ஐ மீறும் வகையில் தன்னிச்சையாகச் செயல்பட்டது. போலி செய்திகள் பரவவும் உதவியது. இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களுக்கும் எங்கள் கொள்கைகள் தெளிவாக உள்ளன. சட்டத்திற்கு மட்டுமே அவர்கள் இணங்க வேண்டும்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications