ஜம்மு காஷ்மீர்: 2-ம் கட்டத்தில் பதிவான வாக்குகள்- 3 நாட்களுக்கு பின் விளக்கம் தந்த தேர்தல் ஆணையம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 2-வது கட்டத்தில் பதிவான வாக்கு விவரங்களை 3 நாட்களுக்கு பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி இருக்கிறது. லோக்சபா தேர்தலின் போதும் இதேபோல வாக்குப் பதிவு விவரங்களை மிக தாமதமாக இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்து அறிவித்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 ஆகிய தேதிகளில் 2 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. 2-வது கட்ட வாக்குப் பதிவு தொடர்பாக 3 நாட்களுக்குப் பின்னர் நேற்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், 25.09.2024 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் இரண்டு செய்திக் குறிப்புகள் எண் 139 & 140-ன் தொடர்ச்சியாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இரண்டாம் கட்ட தேர்தலில் 57.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து வரும் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் 2024-ல் 26 சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாலின வாரியாக வாக்களித்த புள்ளிவிவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
2-வது கட்டம் (26 தொகுதிகள்)
ஆண் வாக்காளர்கள் 58.35%
பெண் வாக்காளர்கள் 56.22%
மூன்றாம் பாலினத்தவர்30.19%
மொத்த வாக்குப்பதிவு 57.31%
காலை 9.30 மணி முதல் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு செயலி மூலம் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடப்புகளை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு, வேட்பாளர்கள் / அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் நிறைவடைந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலின் போதும் இதேபோல ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவையும் மிக மிக தாமதமாக உறுதி செய்திருந்தது இந்தியத் தேர்தல் ஆணையம். இது தொடர்பான சர்ச்சை தற்போது வரை ஓயாமல் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications