நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
டெல்லி: ஒரே நாடு ஒரே மதம், ஒரே மொழி விவகாரம் குறித்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர்களான நேருவும், இந்திராவும் கவனமாக இருந்தார்கள் என்றும், இந்த விவகாரத்தில் அவர்கள் முட்டாள்கள் இல்லை எனவும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறியுள்ளார்.
பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து ஒரே நாடு-ஒரே மதம்-ஒரே மொழி குறித்த சர்ச்சை தீவிரமாக மேலெழுந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்திஸ்ரீ டி பண்டிட், "மதம், ஆடை, மொழியில் ஒற்றை தன்மையை புகுத்த முடியாது" என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசியதாவது, "இந்தி பேசும் மாநிலங்களில் மூன்று மொழி கொள்கை உள்ளது. இந்தி, ஆங்கிலத்துடன் தென்னிந்திய மொழி ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இதே மற்ற மாநிலங்களில், பிராந்திய மொழி அத்துடன் இந்தி அல்லது ஆங்கிலத்தை எடுத்து படிக்கலாம். சிலர் இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோருகின்றனர். சில மாநிலங்களில் வேண்டுமானால் இது சாத்தியமாகலாம். ஆனால், தென் மாநிலங்களில் இப்படி செய்வது சவாலானதாக இருக்கும்.
ஏன் கிழக்கு மாநிலமான மகாராஷ்டிராவில் கூட இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிப்பது என்பது வேலைக்காகது என்று நான் நினைக்கிறேன். மொழி என்பது மிகவும் கவனமாக கையாளக்கூடிய பிரச்னை. அதேபோல நாடு முழுவதும் ஒரே மதத்தை திணிக்க முடியாது. மதம் என்பது தனிப்பட்ட மனிதனோடு தொடர்புடையது. எனவே ஒரே மதத்தை திணிப்பது என்பது சாத்தியமாகாது. இந்த விஷயத்தில் நேருவும், இந்திராவும் முட்டாள்கள் அல்ல. ஆனால், தற்போது மேலே இருப்பவர்கள் அதை செய்ய முயல்கிறார்கள்.
மற்றொருபுறம் கல்வி நிறுவனங்களில் ஆடை கட்டுப்பாடு குறித்த பிரச்னைகள் தீவிரமடைந்து வருகின்றன. ஆடை சுதந்திரம் தனிப்பட்ட மனிதர்களுக்கானது. யாராவது ஹிஜாப் அணிய விரும்பினால் அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் அதில் நம்மால் தலையிட முடியாது" என்று கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரம், முகலாயர்களின் வரலாறு இந்திய பாடபுத்தகத்தை ஆக்கிரமித்திருப்பதாக கூறியுள்ளார். "இந்தியக் கல்வி அமைப்பில் பல்வேறு கலாச்சார வரலாறுகளின் பிரதிநிதித்துவத்தில் சமநிலை வேண்டும். நமது கல்வியில் மேற்கத்தியமயமாக்கலின் தாக்கம் இருக்கிறது. இந்திய வரலாற்றில், 200 ஆண்டுகளுக்கும் குறைவாக ஆட்சி செய்த முகலாயர்கள் 200 பக்கங்களுக்கு மேல் ஆக்கிரமித்துள்ளனர். நான் அவர்களுக்கு எதிரானவன் அல்ல. அவர்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
அதேபோல உலகளவில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராஜ்ஜியத்தை கொண்ட சோழர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும். துர்திஷ்டவசமாக சோழர்கள் குறித்து தேசிய அளவிலான பாட திட்டத்தில் அரை பக்கம் கூட இல்லை. மராட்டியர்கள், சாதவாகனர்கள் அல்லது காகத்தியர்கள், இது போன்ற ராஜ்ஜியங்கள் இருந்தன என்பது பலருக்கும் தெரியவில்லை. நம் வரலாற்றைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். இதை மதக் கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள், மதத்தை தூக்கி எறிந்து விடுங்கள். அனைவருக்கும் சமமான இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" எனக்கூறியுள்ளார்.
மொழி, மதம் மற்றும் ஆடை விவகாரங்களில் பாஜகவின் கருத்துக்கு வெளிப்படையாக ஜேஎன்யு துணை வேந்தர் எதிராக பேசியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications