என் வீட்டில் எரிந்த நிலையில் பணம் இருந்ததை வீட்டு பணியாளருக்கு காட்டவில்லை! நீதிபதி யஷ்வந்த் வர்மா
டெல்லி: எனது வீட்டில் தீவிபத்து நடந்த அறையில் எரிந்த நிலையில் கட்டுக் கட்டாக பணம் இருந்ததாக அங்கு சென்ற என் வீட்டு பணியாளரிடம் யாரும் தெரிவிக்கவில்லை என நீதிபதி யஷ்வந்த் வர்மா பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயவுக்கு, நீதிபதி யஷ்வந்த் வர்மா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வர்மா கூறியிருப்பதாவது: அந்த பணம் குறித்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கோ எதுவும் தெரியாது. அந்த பணத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை.

என் வீட்டில் கடந்த 14 ஆம் தேதி தீப்பிடித்த போது அதிர்ச்சி அடைந்த எனது மகளும் எனது தனிப்பட்ட பாதுகாவலரும் தீயணைப்புத் துறைக்கு போன் செய்தனர். அந்த போன் கால்கள் எல்லாம் ரெக்கார்டு செய்யப்பட்டிருக்கிறது.
தீயை அணைக்க வந்த தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எனது வீட்டில் இருந்தவர்களையும், என் வீட்டு பணியாளர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
தீயை அணைத்த போது என் குடும்ப உறுப்பினர்களும் என் வீட்டு பணியாளர்களும் தீப்பிடித்து எரிந்த அறையை சென்று பார்த்த போது அங்கு எரிந்த நிலையில் எந்த பணமும் இருப்பதை அவர்கள் பார்க்கவில்லை. அவர்களுக்கு எரிந்த நிலையில் பணம் இருப்பதும் காட்டப்படவில்லை.
எனது வீட்டின் பொருட்கள் வைக்கும் பாதுகாப்பு அறையில் இருந்து பணமூட்டை எடுக்கப்பட்டதாக கூறப்படுவதை நான் மறுக்கிறேன். உண்மையில் அன்று இரவு அகற்ற முயன்ற எரிந்த நிலையிலான குப்பையின் ஒரு பகுதி இன்னும் என் வீட்டில்தான் உள்ளது.
அந்த அறையில் பயன்படுத்தப்படாத பொருட்கள், பாட்டில்கள், மெத்தைகள், ஸ்பீக்கர்கள், கார்பெட்டுகள் உள்ளிட்ட வேஸ்ட் பொருட்கள் மட்டுமே இருக்கும். அந்த அறை எப்போதும் திறந்தே இருக்கும். அங்கு என் பணியாளர்கள் செல்வதற்கும் அனுமதி உண்டு.
தீவிபத்து நடந்த போது நானும் எனது மனைவியும் மத்திய பிரதேசத்திற்கு சென்றிருந்தோம். அடுத்த நாள் 15 ஆம் தேதி மாலைதான் டெல்லி வந்தோம். பொருட்கள் வைக்கும் அறைக்கும் எனது அறைக்கும் கூட தொடர்பு இருக்காது. என் வீட்டில் இருப்போருக்கும் அந்த பணத்தை காட்டாத போது என் மீது குற்றம்சாட்டுவதை நான் எப்படி ஏற்க முடியும். இது அபத்தம்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மார்ச் 14 ஆம் தேதி ஹோலி பண்டிகையின் போது இரவு 11.45 மணிக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. அங்கு தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்கள், அந்த அறையில் இருந்து கணக்கில் வரப்படாத பணம் எரிந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து புகாரின் பேரில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவரிடம் உள் விசாரணையை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடத்துவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications