பாஜக மத்திய அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிராக 6 மாதம் சிறை தண்டனை பிரிவின் கீழ் வழக்கு!
டெல்லி: பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி மீது 6 மாதம் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் பிரிவுகளின் கீழ் கேரளா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சூர் பூரம் திருவிழாவின் போது ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்திய புகாரின் பேரில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த மாதம் கேரளா மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா நடைபெற்றது. அப்போது ஆம்புலன்ஸ்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் ஆம்புலன்ஸ் ஒன்றில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பயணித்தார். இது மிகப் பெரும் சர்ச்சையானது.

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபிக்கு எதிராக திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புகார் மனு தரப்பட்டது. மக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் திருச்சூர் பூரம் திருவிழாவில் ஆம்புலன்ஸை சுரேஷ் கோபி பயன்படுத்தியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதனை மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மறுத்திருந்தார். தமக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது; இதனால்தான் ஆம்புலன்ஸில் செல்ல நேர்ந்தது; திருச்சூர் பூரம் திருவிழாவில் பாதுகாப்பு நடைமுறைகள் எதனையும் தாம் மீறவும் இல்லை எனவும் அத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விளக்கம் தந்திருந்தார். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் தாம் தயார் என்றார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி.
இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரளா மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி செய்தது சட்டவிரோதம் என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை கிடைக்கும்; அத்தகைய பிரிவுகளின் கீழ் கேரளா மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications