ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: ராப்ரி தேவியிடம் 5 மணிநேரம் அமலாக்கப் பிரிவு விசாரணை
டெல்லி: ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாகப் பெற்ற வழக்கி பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 5 மணிநேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
ரயில்வே பணி வழங்குவதற்கு நிலம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள நிறுவனருமான பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. லாலு பிரசாத் குடும்பத்தினர் பலரும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக ராப்ரி தேவி மற்றும் உறவினர்கள், கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அன்னிய செலாவணி மோசடி பிரிவுகளின் கீழ் இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக ஆஜராக ராப்ரி தேவிக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதனடிப்படையில் இன்று டெல்லியில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் ராப்ரி தேவி ஆஜரானார். அவரிடம் சுமார் 5 மணிநேரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். ராப்ரி தேவி மீண்டும் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications