என்னாச்சு.. பாசமாக பாஜக திடீர் நட்புக் கரம்.. அதிமுக, அகாலிதளம் எதையும் விடுவதாக இல்லை.. ஓஹோ!
டெல்லி: லோக்சபா தேர்தலில் 400 இடங்களில் வெல்வோம் என்றெல்லாம் பிரதமர் மோடி ஒரு பக்கம் சவால் விட்டுக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் பலப்படுத்துவதற்கான முயற்சிகள் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜகவை விட்டு தலைதெறிக்க ஓடிய பல மாநில கட்சிகளை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்க பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய அரசியல் களம் பல்வேறு கூட்டணிகளை சந்தித்துள்ளது. 1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவின் இரு பெரும் தலைவர்களான வாஜ்பாயும் அத்வானியும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியில் அப்போது பலமான மாநில கட்சிகளான அதிமுக, சிரோமணி அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம், சமதா கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, பாமக, மதிமுக உள்ளிட்டவை இடம் பெற்றன. 1998 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்ற நிலையில் தெலுங்குதேசமும் இணைந்தது. ஆனால் 1999-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

பாஜக அணியில் திமுக: 1999 லோக்சபா தேர்தலின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவின் கொள்கை எதிரியான திமுகவும் இடம் பெற்றது. 1999 லோக்சபா தேர்தலின் போது முன்பைவிட வலிமையான கூட்டணியாக பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருந்தது. ஐக்கிய ஜனதா தளம், தெலுங்குதேசம், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, பிஜூ ஜனதா தளம், மதிமுக என 27 கட்சிகள் அக்கூட்டணியில் இடம் பெற்று ஆட்சியையும் பிடித்தது.
2004 முதல் 2009 வரை பாஜக அணி: 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக வெளியேற அந்த இடத்தில் அதிமுக மீண்டும் இடம் பெற்றது. 27 கட்சிகளுடன் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வெறும் 13 கட்சிகள் கொண்ட அணியாக சுருங்கியது. 2004 லோக்சபா தேர்தலில் பாஜகவின் இந்த கூட்டணி தோல்வியைத் தழுவியது. 2009 லோக்சபா தேர்தலில் 13 கட்சிகள் எண்ணிக்கை 10 ஆகவும் குறைந்தது. அத்தேர்தலிலும் நாடு முழுவதும் 158 இடங்களில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் வெல்ல முடிந்தது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகவும் இருந்தது.
விஸ்வரூபம் காட்டிய பாஜக கூட்டணி: 2014 லோக்சபா தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் பழைய பார்முக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி திரும்பியது. பாஜக, தெலுங்குதேசம், சிவசேனா, தேமுதிக (தமிழகத்தில் அப்போது எதிர்க்கட்சி), அகாலி தளம், பாமக, மதிமுக, லோக் ஜனசக்தி. என்.ஆர்.காங்கிரஸ், கொமதேக என 24 கட்சிகள் இந்த அணியில் இடம் பெற்றன. 2014 லோக்சபா தேர்தலில் சாம்பலில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவை போல மொத்தம் 336 இடங்களைக் கைப்பற்றி 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு முடிவுரை எழுதியது தேசிய ஜனநாயகக் கூட்டணி. 2019 தேர்தலிலும் 21 கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொண்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி. அத்தேர்தலிலும் 352 இடங்களில் வெல்ல 2-வது முறையாக மோடி பிரதமரானார்.
வலிமையற்ற தேசிய ஜனநாயக கூட்டணி: தற்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கிறது. ஆனால் பாஜக தலைமையிலான இந்த கூட்டணியில் கடந்த காலங்களைப் போல வலிமையான மாநில கட்சிகள் எதுவுமே இல்லை. மகாராஷ்டிராவில் உடைக்கப்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் அணிகள்தான் பலமான கட்சிகள். இவைகளைத் தவிர எஞ்சிய 15-க்கும் மேற்பட்ட கட்சிகளில் பல வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவை. லோக்சபாவிலோ ராஜ்யசபாவிலோ ஒரு உறுப்பினர் கூட இல்லாத கட்சிகளும் அதிகமாக தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கின்றன.
கூட்டணியை வலுப்படுத்தும் பாஜக: இந்த நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க பாஜக தலைமைக்கு ஏதோ ஒரு வகை அசரீரி அடித்தது போல திடுதிப்பென தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் வலிமைப்படுத்துவது என கடந்த சில மாதங்களாக போராடி வருகிறது. கர்நாடகாவை சேர்ந்த மதச் சார்பற்ற ஜனதா தளத்தை அண்மையில் கூட்டணியில் இணைத்தது பாஜக. இதனைத் தொடர்ந்து பீகார் பழைய பங்காளியான நிதிஷ்குமாரின் ஜேடியூவை மீண்டும் இழுத்து கொண்டு வந்துவிட்டது பாஜக. இந்த கட்சிகளைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களால் கூட்டணியை முறித்த பஞ்சாப்பின் சிரோமணி அகாலி தளத்தை மீண்டும் கூட்டணிக்கு வருவதற்கு தீவிரமாக போராடுகிறது பாஜக. அதேபோல ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்துகிறது பாஜக.
அதிமுகவும் பாஜகவும்: பாஜகவின் மிக நம்பிக்கையான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக இருந்த அண்ணா திமுக அண்மையில்தான் அக்கூட்டணியை விட்டு வெளியேறியது. அண்ணா திமுகவை எப்படியாவது மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வந்துவிடலாம் என்பது பாஜக மேலிடத்தின் போராட்டம். இதற்கான பேச்சுவார்த்தைகளில் சிறிதும் பிடி கொடுக்காமல் திட்டவட்டமாக முறிந்தது முறிந்ததுதான் என உதறிக் கொண்டே போகிறது அண்ணா திமுக.
பாஜகவின் உதறலும் ஓட்டமும்: பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் வலுப்படுத்தும் இந்த முயற்சிகள் குறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர்கள், பிரதமர் மோடியின் ஒற்றை முகமே போதும்.. லோக்சபா தேர்தலில் எளிதாக வெல்வோம் என்பதுதான் பாஜகவின் நம்பிக்கையாக இருந்தது. இதனால்தான் 2014க்குப் பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற கூட்டணியே இல்லாத நிலைமை உருவானது. மோடியின் விஸ்வரூபமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை சிதறடிக்க வைத்தது என்றும் கூட சொல்லலாம்.
ஆனால் எப்போது வலுவான மாநில கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கினவோ அப்போதே பாஜகவுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க தொடங்கியது. இதனால்தான் இந்தியா கூட்டணிக்கு போட்டியாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தை கூட்டியது. இப்போது வரைக்கும் கடந்த 7 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் கூட கிடையாது. என்னதான் இந்தி பெல்ட் அல்லது வட இந்திய மாநிலங்களில் வென்றாலும் மாநிலங்களில் வலுவான அதிக இடங்களைக் கைப்பற்றும் சாத்தியமுள்ள ஒரு சில கட்சிகளையாவது துணைக்கு வைத்துக் கொண்டால்தான் வெற்றி உறுதி என நிம்மதியாக தூங்க முடியும் என்பதுதான் பாஜகவின் நிலை. அதற்காகத்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியை தூசு தட்டி பட்டி டிங்கரிங் பார்க்கிறது பாஜக மேலிடம் என்கின்றனர்.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்!












Click it and Unblock the Notifications