பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கையிலெடுக்கும் "பிரம்மாஸ்திரம்!" ஜெர்மன் மாடல் வாக்குறுதி தெரியுமா?
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இளைஞர்களை இலக்கு வைத்தே உருவாக்கப்பட்டு வருகிறதாம். தொழிற் பயிற்சி படிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டுக்குள் வேலைவாய்ப்பு கிடைக்க வகை செய்யும் வாக்குறுதிகள், அரசு பணிகளுக்கான தேர்வில் வினாத்தாள் கசிந்தால் பாதிக்கப்படும் அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் காங்கிரஸ் கட்சி உருவாக்கி வரும் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுகிறதாம்.
லோக்சபா தேர்தலில் பிரசாரங்கள், வேட்பாளர்களைப் போல பிரதான அம்சமாக இடம் பெறுவது தேர்தல் அறிக்கைகள்தான். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதற்கு தேர்தல் முடிவுகளே சாட்சிகள். குறிப்பாக திமுக வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் பெரும் எதிர்பார்ப்பாகவும் தேர்தல் களத்தின் திசைவழிப் போக்கை தீர்மானிப்பதாகவும் இருந்து வருகிறது.

தற்போது லோக்சபா தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிப்புகளில் படுதீவிரமாக இருந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். மத்திய பாஜக அரசால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடுவதை சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறார். காங்கிரஸின் லோக்சபா தேர்தல் அறிக்கையிலும் வேலைவாய்ப்பு குறித்த ஏராளமான அம்சங்கள் இடம் பெற உள்ளதாம்.
குறிப்பாக ஜெர்மனியில் தொழிற் பயிற்சி பழகுநர் படிப்பின் போது வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரப்படுகிறது; அதே மாடலை இந்தியாவில் பின்பற்றுவதற்கான வாக்குறுதியை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வழங்குமாம். இதன் மூலம் படித்து முடித்த உடன் ஓராண்டுக்குள் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுவிட முடியும் என்கிறதாம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.
அதேபோல அரசு பணிகளுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் நம்பிக்கையுடன் தேர்வு எழுதுவதும் பின்னர் வினாத்தாள் லீக் ஆகி அந்த தேர்வே ரத்து ஆவதும் அதிகரித்து வருகிறது. அண்மையில் மத்திய அரசு இதற்கு கடுமையாக தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையோ இன்னும் ஒரு படி மேலே போய், வினாத்தாள் கசிந்துவிட்டால் தேர்வு எழுதிய இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவோம் என்ற வாக்குறுதியையும் தரப் போகிறதாம். கிராமம் மற்றும் நகர்ப்புற மாணவர்கள், இளைஞர்கள் என இளந்தலைமுறை வாக்காளர்களை வளைத்துப் போட இலக்கு வைத்து காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயாராகிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications