'வயநாடு' முடியட்டும்..'அமேதி' தொகுதிக்கு அமைதியாக ஸ்கெட்ச் போடும் ராகுல் காந்தி- அதிர போகுது பாஜக?
டெல்லி: கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா? இல்லையா? என்கிற சஸ்பென்ஸ் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. வயநாடு தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து பிரசாரத்தையும் உருக்கமாக தொடங்கினார் ராகுல் காந்தி.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக "இந்தியா" கூட்டணியிலேயே இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனிராஜா போட்டியிடுகிறார். பாஜகவின் மாநில தலைவர் சுரேந்திரனும் களம் காண்பதால் கடும் போட்டி உருவாகி உள்ளது.
இந்த நிலையில் அமேதி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. நேரு குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் மேலிடம் பரிசீலனை செய்து வருகிறது. ரேபரேலி தொகுதியில் இந்த முறை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடவில்லை. ராஜ்யசபா எம்பியாகிவிட்டார் சோனியா. அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.
இதனால் ரேபரேலியில் இந்த முறை சோனியா மகள் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்கிற பேச்சுகள் உள்ளன. அதேபோல அமேதியில் தாம் போட்டியிடவே மக்கள் விரும்புவதாக பிரியங்காவின் கணவர்- சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா கூறியிருந்தார். இன்னொரு பக்கம், அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தியே போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில், கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். இப்போதைக்கு வயநாடு தொகுதியில் முழு கவனமும் செலுத்துகிறோம். வயநாடு லோக்சபா தொகுதிக்கு வாக்குப் பதிவு முடிந்த பின்னரே அமேதியில் வேட்பு மனுத் தாக்கலே தொடங்கும். அதனால் அமேதி குறித்து எந்த முடிவையும் காங்கிரஸ், ராகுல் காந்தி அறிவிக்கவில்லை. வயநாடு முடிவடைந்த பின்னர் பாஜவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ராகுல் காந்தியையே காங்கிரஸ் மேலிடம் களமிறக்கும்.. இந்த முறை அமேதியில் ராகுல் வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் காங்கிரஸ் தலைமை முழு பலத்துடன் அமேதி பிரசாரத்தை முன்னெடுக்கப் போகிறது என்கின்றன.












Click it and Unblock the Notifications