Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் இதுவரை கவிழ்ந்த கூட்டணி ஆட்சிகள், ராஜினாமா செய்த பிரதமர்கள்..எத்தனை யார் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:1977-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை 5 கூட்டணி ஆட்சிகள் மத்தியில் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளை முழுமை செய்யாமல் கவிழ்ந்த வரலாறு இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

லோக்சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்கவிலை. பெரும்பான்மைக்கு தேவை 272 இடங்கள். இதனால் பாஜக தமது தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை நம்பி புதிய ஆட்சி அமைக்கிறது. புதிய கூட்டணி அரசின் பிரதமராகிறார் நரேந்திர மோடி.

Lok Sabha Election 2024 2024

இந்தியாவில் கூட்டணி ஆட்சிகளின் சகாப்தம் 1970களின் இறுதியில் தொடங்குகிறது. இந்தியாவில் முதலாவது கூட்டணி ஆட்சி என்பது 1977-ல் அமைந்தது. 1975-ம் ஆண்டு எமர்ஜென்சியை இந்திரா காந்தி அறிவித்து ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தார். எமர்ஜென்சி கால அடக்குமுறைகள் முடிவுக்கு வந்து 1977-ல் நாடு பொதுத் தேர்தலை சந்தித்தது.

1977 பொதுத் தேர்தல்: 1977-ம் ஆண்டு இந்திரா காந்தியின் காங்கிரஸ்(ஐ)க்கு எதிராக பெரும்பாலான எதிர்கட்சிகள் ஒன்று திரண்டன. ஜனதா கட்சி, சிபிஎம், அகாலி தளம், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, பார்வார்டு ப்ளாக், திமுக என பல கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. அத்தேர்தலில் ஜனதா கட்சி 298 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்திரா காங்கிரஸ், அண்ணா திமுக இணைந்த கூட்டணி வெறும் 189 இடங்களில்தான் வென்றது. ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக 17 இடங்களிலும் இந்திரா காங்கிரஸ் 14, சிபிஐ 3 என மொத்தம் 34 இடங்களில் இந்திரா காங்கிரஸ் கூட்டணி வென்றது. திமுக 2, ஸ்தாபன காங்கிரஸ் 3 என மொத்தம் 5-ல் திமுக அணி வென்றது.

முதலாவது கூட்டணி ஆட்சி- 2 பிரதமர்கள்: 1977-ல் நாட்டின் முதலாவது கூட்டணி ஆட்சியில் முதல் பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவி ஏற்றார். ஆனால் மொரார்ஜி தேசாயால் இந்த கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. இதனால் மொரார்ஜி தேசாய் பதவியை ராஜினாமா செய்ய காங்கிரஸ் ஆதரவுடன் சரண் சிங் பிரதமராக குறுகிய காலம் பதவி வகித்தார். மொரார்ஜி தேசாய் மொத்தம் 2 ஆண்டுகள் 170 நாட்களும் சரண்சிங் மொத்தம் 179 நாட்களுமே பிரதமர் பதவியில் இருந்தனர். இந்தியாவின் முதல் கூட்டணி அரசு அப்போது கவிழ்ந்தது.

விபி சிங் காலம்: 1980 முதல் 1989 வரை இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் அசைக்க முடியாத பெரும் பலத்துடன் இருந்தது. 1984 லோக்சபா தேர்தலில் ராஜீவ் காந்தி பிரதமரான போது அவரது வலது கரமாக இருந்தவர் விபி சிங். நிதித்துறை, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார் விபி சிங். பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ராஜீவ் காந்தியின் போபர்ஸ் பீரங்கி பேர முறைகேடுகளுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார் விபிசிங். இதனால் காங்கிரஸில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார் விபி சிங். அப்போது ஜனதா கட்சி, ஜன மோர்ச்சா, லோக்தளம், காங்கிரஸ் (எஸ்) என்ற பெயரிலான கட்சிகள் இணைந்து 'ஜனதா தளமாக' விபி சிங் தலைமையில் உருவெடுத்தன. அப்போது திமுக, தெலுங்குதேசம் (என்டிஆர்), அஸ்ஸாம் கன பரிஷத் ஆகிய வலுவான மாநிலக் கட்சிகளுடன் இணைந்து தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது. இந்தியாவில் 2-வது கூட்டணி அரசாங்கத்துக்கான அத்தியாயத்தின் தொடக்கம் இது.

1989 பொதுத் தேர்தல்: 1989-ம் ஆண்டு நாடு பொதுத்தேர்தலை எதிர்கொண்டது. அப்போது காங்கிரஸ் vs தேசிய முன்னணி என களம் இருந்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் 197 இடங்களில் வென்றது. விபிசிங்கின் ஜனதா தளம் 143 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 85; சிபிஎம் 33; சிபிஐ 12 இடங்களில் வென்றிருந்தன. தமிழ்நாட்டில் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்து மொத்தம் 38 இடங்களில் வென்றன. அதிமுக 11 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றது. திமுக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. திமுக கூட்டணியில் இருந்த சிபிஐ 1 தொகுதியில் வென்றது.

2-வது கூட்டணி ஆட்சி கவிழ்ந்த கதை: 1989 தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும் விபி சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி அமைக்க பாஜகவும் இடதுசாரிகளும் ஒருசேர ஆதரவு தந்தன. இதனால் நாட்டில் 2-வது கூட்டணி ஆட்சியாக தேசிய முன்னணி ஆட்சி அமைந்தது. முதலில் தேவிலாலைத்தான் பிரதமராக விபி சிங் பரிந்துரைத்தார். பின்னர் ஒருமனதாக விபி சிங் பிரதமரானார். அந்த காலத்தில் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளில் 27% இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரை அமலானது. அப்போதுதான் அயோத்தி ராமர் கோவிலுக்கான ரதயாத்திரையை அத்வானி நடத்தினார். விபி சிங் பிரதமராக 1989-ம் ஆண்டு டிசம்பர் 2 முதல் 1990-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி வரை பதவி வகித்தார். தேசிய முன்னணி அரசுக்கான ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதால் விபி சிங் அரசு கவிழ்ந்தது. இதன் பின்னர் ஜனதா தளம் (சோசலிஸ்ட்) சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அரசு சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் சந்திரசேகர் அரசு கவிழ பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1996 பொதுத் தேர்தல்: 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் நரசிம்மராவ் தலைமையில் வலிமையான காங்கிரஸ் அரசு அமைந்தது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் 1996-ல் நடைபெற்ற எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது பாஜக அதிகபட்சமாக 161 இடங்களில் வென்றதால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 13 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்காத நிலையில் வாஜ்பாய் பதவி விலகினார்.

ஐக்கிய முன்னணி அரசும் 2 பிரதமர்களும்: இதனைத் தொடர்ந்து திமுக, இடதுசாரிகள் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கின. காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு தர ஐக்கிய முன்னணி 4-வது கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன் பிரதமராக தேவகவுடா பதவி வகித்தார். இந்த அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்தது. இதனால் தேவகவுடா பதவி விலகி ஐகே குஜ்ரால் பிரதமரானார். இந்த அரசும் நீடிக்கவில்லை. 1997 நவம்பர் 28-ல் காங்கிரஸ் ஆதரவை விலக்கியதால் குஜ்ரால் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

ஓராண்டில் கவிழ்ந்த 5-வது கூட்டணி அரசு: 1998-ம் ஆண்டு நாடு மீண்டும் பொதுத் தேர்தலை சந்தித்தது. பாஜக,அதிமுக, தெலுங்கு தேசம் ஆதரவுடன் நாட்டின் 5-வது கூட்டணி ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்தது. ஆனால் ஒரு ஆண்டு காலத்திலேயே அதிமுக ஆதரவை வாபஸ் பெற்றதால் இந்த கூட்டணி ஆட்சியும் நீடிக்கவில்லை.

5 ஆண்டுகள் நீடித்த முதல் கூட்டணி ஆட்சி: 1999-ல் மற்றொரு பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக, சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், பாமக, மதிமுக, தேசிய மாநாட்டு கட்சி, அகாலி தளம், அசாம் கனபரிஷத் என பல கட்சிகள் இடம்பெற்றன. பொது செயல் திட்டம் உருவாக்கப்பட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அதாவது நாட்டின் 6-வது கூட்டணி அரசு அமைந்தது. இந்த கூட்டணி ஆட்சிதான் 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்த முதலாவது கூட்டணி ஆட்சி.

10 ஆண்டுகள் தொடந்த கூட்டணி ஆட்சி: 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் 145 இடங்களிலும் பாஜக 138 இடங்களிலும் வென்ற நிலையில் திமுக, இடதுசாரிகள் உள்ளிட்டவை ஆதரவுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுநாட்டின் 7-வது கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். இந்த கூட்டணி ஆட்சியும் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தது. 5 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தியாவின் 2-வது கூட்டணி அரசு ஐமு ஆட்சியாகும். 2009-ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கூட்டணி ஆட்சியை அமைத்தது. அப்போதும் பிரதமராக மன்மோகன்சிங் பதவி வகித்தார். நாட்டின் 8-வது கூட்டணி ஆட்சியும் 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்தது.

பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி: ஆனால் 2014, 2019 லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களுக்கு அதிகமாக பெற்றது. ஆனாலும் பாஜகவோ தமது தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுத்திருந்தது. 2014-ல் பெரும்பான்மையை விட 10 இடங்கள்தான் அதாவது 282 இடங்களில் பாஜக வென்றிருந்தது. 2019ல் 303 இடங்களில் பாஜக வென்றிருந்தது. இருந்த போதும் கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொண்டே பாஜக ஆட்சியை நடத்தியது.

மீண்டும் கூட்டணிகள் தயவில் புதிய கூட்டணி ஆட்சி: தற்போதைய தேர்தலில் பாஜக, காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால் 2014-க்கு முந்தைய நிலைமை உருவாகிவிட்டது. 240 இடங்களைப் பெற்ற பாஜக மீண்டும் கூட்டணி கட்சிகளின் தயவில்தான் புதிய கூட்டணி அரசாங்கத்தை நடத்த வேண்டிய நிலைமை உருவாகி இருக்கிறது. பிரதமராக மீண்டும் பதவியேற்றாலும் 'கூட்டணி' கட்சிகள் என்பது அவரது பதவி, கூட்டணி ஆட்சியின் தலைக்கு மேல் தொங்கும் கத்திகள்தான் என்பதுதான் இந்திய வரலாறு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+