உதயசூரியனால் நெருக்கடியா? 5 மாநிலங்களில் போட்டியிட பானை சின்னம்..தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் மனு
டெல்லி: லோக்சபா தேர்தலில் 5 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது; விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று மனு கொடுத்தார்.
லோக்சபா தேர்தலில் "இந்தியா" கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் திமுகவின் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி குழு பேச்சுவார்த்தை நடத்தியது. லோக்சபா தேர்தலில் 2 தனித் தொகுதிகளுடன் ஒரு பொதுத் தொகுதியை ஒதுக்க கோரியிருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

இதனிடையே டெல்லியில் இன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் ஒரு மனு கொடுத்தார். அதில், லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய 5 தென் மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. ஆகையால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொதுவான சின்னமாக பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம்.
திமுக கூட்டணியில் 2 தனித் தொகுதிகள், 1 பொதுத் தொகுதியை கேட்டுள்ளோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு அரசியல் கட்சி. பொதுத் தொகுதியில் போட்டியிடக் கூடாது என எதுவும் இல்லை. பொதுத் தொகுதியை வழங்க வேண்டும் என நீண்டகாலமாகவே விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தி வருகிறது. அதனால் இம்முறையும் திமுகவிடம் பொதுத் தொகுதிகளில் ஒன்றை விசிகவுக்கு ஒதுக்க கோரியுள்ளோம்.
லோக்சபா தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நெருக்கடி எதுவும் தரப்படவில்லை. 5 மாநிலங்களில் இம்முறை போட்டியிடுவதால் நாங்கள் பொதுவான பானை சின்னத்தை கேட்டுள்ளோம். இதற்காக இன்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications