‛ஆவாஸ் யோஜனா’.. பிரதமருக்கு தமிழில் கடிதம் எழுதிய மதுரை பெண்.. பூரித்துபோன மோடி! ஒரே மகிழ்ச்சி
டெல்லி: வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயனடைந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழில் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அதேநேரத்தில் பெருமையாக சில விஷயங்களை தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் சி.ராஜகோபாலாச்சாரி. இவர் தான் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக செயல்பட்டார். இவரது கொள்ளு பேரன் பெயர் சிஆர் கேசவன். சென்னையில் வசித்து வரும் இவர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் தான் சிஆர் கேசவன் திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு சிஆர் கேசவன் பாஜகவில் இணைந்தார். நேற்று சிஆர் கேசவன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த வேளையில் சிஆர் கேசவன் தனது வீட்டில் பணியாற்றும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் ரோடு திருவேடகத்தை சேர்ந்த சுப்புலட்சுமி எழுதிய கடிதத்தை பிரதமர் மோடியிடம் வழங்கினார். இந்த கடிதம் தமிழில் எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில் சுப்புலட்சுமி மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயனடைந்துள்ளதாக தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அந்த கடிதத்தில் இடம்பெற்றிருந்ததாவது:

நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட அருந்ததியர் சமுதாயத்தை சார்ந்தவர். தினம் தினம் எனது குடும்பம் தினசரி வருமானத்திற்கே கஷ்டப்படும். இப்போது ராஜாஜி பேரன் சிஆர் கேசவன் வீட்டில் சமையல் வேலை செய்கிறேன். நான் தமிழ்நாடு மதுரை மாவட்டத்தில் உள்ள எனது வீட்டு மனையில் பிரதமன் மந்திர ஆவாஸ் யோஜனா என்ற அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் 04.02.2021ம் ஆண்டு சுயமாக வீடடு கட்டுவதற்கு விண்ணப்பித்தேன்.
இத்திட்டத்தின் மூலம் நான்கு தவணையாக ரூ.2,10,000 பெற்று அதன்மூலம் இப்போது நான் ஒரு வீட்டை கட்டி உள்ளேன். இந்த வீடு எங்கள் தலைமுறையின் முதல் சிமெண்ட் கட்டட வீடாக உள்ளது. இதன்மூலம் எங்களுக்கு ஒரு மதிப்பும், மரியாதையும் கிடைத்துள்ளது. இதனால் நாங்கள் மிகவும் பயன் அடைந்துள்ளோம். இவற்றின் மூலம் எங்களது சொந்த ஊரில் ஒரு கவுரவமான வாழ்வை வாழ்கின்றோம். இவற்றுக்கு காரணம் தங்களின் தலைமையில் நடைபெறும் ஆட்சி முறையும், தங்களின் திட்டங்களும் தான். மேலும் என் குடும்பத்தினர் சார்பாகவும், இந்த திட்டத்தில் பயனடைந்த மக்களின் சார்பாகவும் உங்களின் ஆட்சியும், திட்டங்களும் மீண்டும் மீண்டும் வளர்ச்சி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் கடிதம் பற்றியும், சுப்புலட்சுமி குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛இன்று நான் சிஆர் கேசவனை சந்தித்தேன். அவர் தனது வீட்டில் சமையல் பணி செய்யும் மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி எழுதிய மனதை தொடும் கடிதம் ஒன்றை என்னிடம் வழங்கினார். சுப்புலட்சுமி நிதி உள்பட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தார். இந்த வேளையில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு பெற விண்ணப்பம் செய்து பயனடைந்துள்ளார்.

சுப்புலட்சுமி தனது கடிதத்தில், இந்த வீடு தனக்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதையும், வீடு மூலம் மரியாதை கிடைத்திருப்பதையும் கடிதம் மூலம் பகிர்ந்துள்ளார். அவர் தனது வீட்டின் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு தனது நன்றியையும், ஆசிகளையும் தெரிவித்தார். அவரைப்போல எண்ணற்ற மக்களின் வாழ்க்கை இந்த திட்டத்தால் மாறியுள்ளது. ஒரு வீடு ஒவ்வொருவரின் வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் முன்னணியில் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications