மகா கும்பமேளா இறுதி நாளில் வானில் அதிசயம்! ஒரே நேர்க்கோட்டில் 7 கோள்களை வெறுங்கண்ணால் காணலாம்!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் மகா கும்பமேளாவின் கடைசி நாளான 28ஆம் தேதி 7 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வருவதை நாம் இந்தியாவில் பார்க்கலாம். மேலும் அன்றைய தினம் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது விசேஷமானது.
உலக மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் விழா என்றால் அது மகா கும்பமேளாவாகும். இது உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. இந்த கும்பமேளாவின் விசேஷமே 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதுதான்.

இந்த திரிவேணி சங்கமத்தில் இதுவரை கோடிக்கணக்கானோர் நீராடியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நீராடினர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹரித்வார், உஜ்ஜையினி, நாசிக் மற்றும் பிரயக்ராஜ் ஆகிய 4 இடங்களில் சுழற்சி முறையில் நடைபெறும். இந்த நீராடல் செய்தால் மறுபிறவி இல்லை என்கிறார்கள். அதனால்தான் இந்த பிறவியே போதும் என நிறைய பேர் இங்கு வந்து நீராடுகிறார்கள்.
சுமார் 44 நாட்கள் நடைபெற்று வரும் இந்த கும்பமேளா வரும் 28ஆம் தேதி முடிவடைகிறது. அதாவது மாசி அமாவாசையில் முடிகிறது. அமாவாசை 27 ஆம் தேதியா இல்லை 28ஆம் தேதியா என்பதிலேயே சந்தேகம் இருக்கிறது.
எது எப்படியிருந்தாலும் பிப் 28 ஆம் தேதி இந்த கும்பமேளா முடிவடையும். நாள்தோறும் அங்கு திரளும் லட்சக்கணக்கான கூட்டத்தை சமாளிக்க முடியாமல் உ.பி. போலீஸ் திணறுவதாக இந்தியா கூட்டணி குற்றம்சாட்டுகிறது.
இந்த நிலையில் கும்பமேளாவின் இறுதி நாளான பிப்.28ஆம் தேதி முக்கிய நிகழ்வு நடைபெறுகிறதாம். அன்றைய தினம் 7 கோள்களும் ஒரே நேர் கோட்டில் வரிசைக்கட்ட போகிறதாம். அதாவது சூரியனின் மற்றொரு புறத்தில் இவை 7 கோள்களும் வரிசையாக நிற்க போகிறது.
நமது சூரிய குடும்பத்தில் உள்ள புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களை இந்தியாவில் இரவு நேரத்தில் வானில் பார்க்கலாம். இது மிகவும் அரிதான நிகழ்வு ஆகும். இது போன்றதொரு நிகழ்வு கடந்த ஜனவரி மாதமே நிகழ்ந்தது.
அப்போது வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூனை பார்த்தோம். அது போல் அந்த கோள்களுடன் தற்போது பிப்ரவரி மாதம் புதன் கோளும் இணைய போகிறது.
இந்த 7 கோள்களில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 5 கோள்களை வெறுங்கண்களிலேயே காணலாம். ஆனால் யுரேனஸ், நெப்டியூனை காண பைனாகுலர், டெலஸ்கோப் தேவைப்படுகிறது. அவை மங்கலாக இருக்கும் என்பதால் தொலைநோக்கி உதவியுடன்தான் பார்க்க முடியும். இவற்றை காண சிறந்த நேரம் சூரிய மறைவுக்கு பிறகும் , சூரிய உதயத்திற்கு முன்பும் ஆகும். வரும் ஆகஸ்ட் மாதம் மத்தியில் 6 கோள்களை காலை வேளையில் காணும் வாய்ப்பு கிடைக்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள். பொதுவாகவே யுரேனஸும் நெப்டியூனும் வெறுங்கண்களால் பார்ப்பது முடியாத காரியம்.
இது போல் ஒரே நேர்க்கோட்டில் 7 கோள்கள் வரும் பிப். 28ஆம் தேதி புனித நீராடுவது என்பது மிகவும் விசேஷமானதாகும். இதனால் அன்றைய தினம் ஏராளமானோர் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தை அமாவாசையன்று கூட்டநெரிசலில் கும்பமேளாவுக்கு சென்றவர்களில் சிலர் இறந்தனர். எனவே இந்த முறை எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மெர்குரி (புதன்), வீனஸ் (வெள்ளி), எர்த் (பூமி), மார்ஸ் (செவ்வாய்), ஜூபிடர் (வியாழன்), சாட்டர்ன் (சனி), யூரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications