கும்பமேளா: 30 பேர் பலி- துரதிருஷ்டவசமானது- உ.பி. பாஜக அரசுக்கு எதிரான மனு டிஸ்மிஸ்- உச்சநீதிமன்றம்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 30 -க்கும் அதிகமானோர் பலியான விவகாரத்தில் அம்மாநில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. இந்த மனுக்கள் மீதான இன்றைய விசாரணையின் போது, மகா கும்பமேளாவில் 30-க்கும் அதிகமானோர் பலியானது துரதிருஷ்டவசமானதுதான்; இந்த விவகாரம் தொடர்பாக உ.பி. மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தற்போது நடைபெற்று வருகிறது. பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்தும் புனித நீராடுகின்றனர்.

6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்ம் கும்பமேளா, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளாவின் போது புனித நாட்களில் நீராடுவதை தங்களது வாழ்நாள் கடமையாக வட இந்தியர்கள் கருதுகின்றனர். இதனால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஒவ்வொரு நாளும் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மகா கும்பமேளாவுக்காக பல்வேறு ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச மாநில அரசு மேற்கொண்டிருக்கிறது. இருந்த போதும் சாதுக்கள், பக்தர்களின் கூடாரங்களில் அவ்வப்போது தீ பிடித்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் நிகழ்கின்றன. அண்மையில் பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பக்தர்களின் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த ஏற்பாடுகள் செய்யாத உ.பி. மாநில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, உ.பி. மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் பலியான சம்பவம் துரதிருஷ்டவசமானதுதான்; ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது; இதனால் மனுதாரர் உ.பி. மாநில உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தி மனுவை டிஸ்மிஸ் செய்தார்.












Click it and Unblock the Notifications