40 எம்.எல்.ஏக்களும் சடலமாக திரும்ப நேரிடும் என மிரட்டல்- உச்சநீதிமன்றத்தில் சிவசேனா அதிருப்தி கோஷ்டி
டெல்லி: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 40 எம்.எல்.ஏக்களின் சடலங்கள்தான் மும்பைக்கு திரும்பும் என்று சிவசேனா தலைவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவித்தனர்.
உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக 16 எம்.எல்.ஏக்களிடம் மகாராஷ்டிரா துணை சபாநாயகர் விளக்கம் கேட்டுள்ளார்.

இந்த தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணைக்கு முன்னதாக அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. சிவசேனா தொண்டர்களால் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற போது, மும்பை உயர்நீதிமன்றத்தை நாடாமல் ஏன் உச்சநீதிமன்றத்துக்கு வந்துள்ளீர்கள்? எனநீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வழக்கறிஞர் நீரஜ் கிஷான் கவுல், குவஹாத்தியில் இருந்து 40 எம்.எல்.ஏக்களும் சடலமாகத்தான் திரும்ப நேரிடும் என சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வீடுகள் தாக்கப்பட்டு வருகின்றன. மும்பையில் நாங்கள் வழக்கை தொடர்ந்து நடத்த முடியாத அச்சுறுத்தல் நிலவுகிறது என குறிப்பிட்டார். 40 எம்.எல்.ஏக்களின் சடலங்கள் தான் மும்பை திரும்பும் என்று எச்சரித்திருந்தார் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத். அதனையே சுட்டிக்காட்டி வாதிட்டார் நீரஜ் கிஷான் கவுல்.












Click it and Unblock the Notifications