வாங்க டீ சாப்பிடலாம் கூப்பிட்ட சோனியா.. விரும்பி சென்ற மம்தா.. 'கலகலத்த 10 ஜன்பாத் வீடு'
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று டெல்லி சென்றார். புது டெல்லியில் உள்ள நம்பர் 10 ஜன்பாத் வீட்டிற்கு சென்றார். அந்த வீடு தான் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் இல்லம்.
சோனியா காந்தியை சந்தித்த மம்தா பானர்ஜி, அங்கு அவருடன் டீ சாப்பிட்டார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உடன் இருந்தார் என்று சொல்லப்படுகிறது.
மே மாதம் நடந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் மம்தா பானர்ஜி முதல்முறையாக டெல்லிக்கு வருகை தந்தார். ஐந்து நாள் பயணமாக டெல்லி வந்துள்ள மம்தா பானர்ஜி பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். முன்னதாக நேற்று மரியாதை நிமர்த்தமாக பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசினார்.

கலகல சந்திப்பு
சோனியா காந்தியை அவரது இல்லத்தில், சந்திக்க உள்ளது பற்றி நேற்று பேசிய மம்தா பானர்ஜி, "அவர் நாளை என்னை 'சாய் பெர் சார்ச்சா'வுக்கு (தேனீர் விருந்துக்கு) அழைத்துள்ளார்," என்று அவர் கூறினார். இதன்படியே இன்று டெல்லியில் உள்ள நம்பர் 10 ஜன்பாத் வீட்டிறகு சென்ற மம்தா பானர்ஜி சோனியா காந்தியை பார்த்து பேசியதுடன் தேநீர் அருந்தினார். இந்த நிகழ்ச்சியின் போது ராகுல் காந்தியு உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தல்
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதாவை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகளின் நீண்டகால திட்டங்கள் குறித்து மம்தா பானர்ஜி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கலந்துரையாடியிருபபார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானரஜி, "அவர் (சோனியா காந்தி) என்னை தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார். அங்கு ராகுல் காந்தியும் இருந்தார். இது ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது. நேர்மறையான சந்திப்பாக இருந்தது. இதன் விளைவு எதிர்காலத்தில் தெரியும். பாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது. அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். நான் தலைவர் இல்லை. நான் ஒரு சாதாரணத் தொண்டர். நான் தெருவில் இருக்கும் ஒரு சாமான்யன். பாஜகவை தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும். பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது ஏன் என தெரியவில்லை, நாடாளுமன்றம் முடங்கி உள்ளது. மக்கள் பிரச்சினைகள் இங்கு பேசப்பட வேண்டும். டீக்கடைகளில் மக்கள் பிரச்சினைகளைப் பேச முடியாது. அதை நாடாளுமன்றத்தில் தான் விவாதிக்க வேண்டும்" இவ்வாறு மம்தா கூறினார்.

தலைவர்களை சந்திக்கிறார்
எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோரை சந்தித்த மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விரைவில் சந்திக்க உள்ளார். தனது பழைய நண்பர்கள் பலரையும் சந்திக்க முடிவு செய்துள்ளார்.

ஐந்து நாள் பயணம்
எதிர்க்கட்சிகளை பாஜகவிற்கு எதிராக ஒருங்கிணைத்து அதை எப்படியாவது 2024 தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று விரும்பும் மம்தா பானர்ஜி, அதற்கான அடித்தளமாக இந்த ஐந்து நாள் பயணத்தை வடிவமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications