பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் 2022: இந்த புரட்சிக்காக பஞ்சாப் மக்களுக்கு வாழ்த்துக்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியைத் தொடர்ந்து அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. இந்த புரட்சிக்காக பஞ்சாப் மக்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி: டெல்லியை அடுத்த பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளது ஆம்ஆத்மி கட்சி.
இது மிகப்பெரிய புரட்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இந்த புரட்சிக்காக பஞ்சாப் மக்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் தற்போதைய நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்திலும் ஆம் ஆத்மி முதல் இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் துரி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ், அகாலிதளம் உள்ளிட்ட பிற கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தற்போது வரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆம் ஆத்மி 90 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், சிரோன்மனி அகாலிதளம் கூட்டணி 7 இடங்களிலும், பாஜக கூட்டணி 4 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வாக்குப்பகிர்வு விவரங்களை பொறுத்தவரையில், ஆம் ஆத்மி மகத்தான வெற்றியை நோக்கி செல்கிறது, அக்கட்சி இதுவரை 41.4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 25 சதவீதத்துடனும், சிரோமணி அகாலி தளம் 21.7 சதவீதத்துடனும் பின்தங்கியுள்ளன.
2017 முதல் 2022 வரையிலான தேர்தல் முடிவுகளை பொறுத்தமட்டில், ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களை பெற்றுள்ளது, காங்கிரஸ் 63 இடங்களை இழந்துள்ளது, சிரோமணி அகாலி தளம் 7 இடங்களை இழந்துள்ளது
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால், மின்சார பில் தள்ளுபடி வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படும் என்று தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இதைச் செய்வதன் மூலம், பஞ்சாபில் சுமார் 77 சதவீதம் முதல் 80 சதவீதம் பேர் பூஜ்ஜிய மின்சார பில் பெறுவார்கள். பழைய மின்சார பில் கட்டத்தேவையில்லை என்று கூறியிருந்தார்.
நாட்டிலேயே மின்சார செலவு டெல்லியில்தான் மிகக்குறைவு. இதை எப்படி செய்ய முடிகிறது. பஞ்சாப்பிலும் ஏன் இதை செய்யக்கூடாது என்றும் கேட்டிருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு அறிவிப்புகள், டெல்லி மாடல் இளைய தலைமுறையினரை கவர்ந்த காரணத்தினால்தான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை பரிசளித்துள்ளனர்.
இது மிகப்பெரிய புரட்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இந்த புரட்சிக்காக பஞ்சாப் மக்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications