"ரூ.10,000 கோடி தவறு" அம்பலமான MiG-29K ஊழல்.. இந்தியாவுக்கு மோசமான ரேடார்களை ஏமாற்றி விற்ற ரஷ்யா?
டெல்லி: பாதுகாப்புத் துறையில் எப்போதும் ஒரு சிறிய தகவலின் லீக் ஆவது கூட ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை விட அதிகச் சேதத்தை ஏற்படுத்திவிடும். 'பிளாக் மிரர்' என்ற ஹேக்கர்கள் இப்போது வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்கள் இப்போது அதுபோன்ற ஒரு பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் புதிய தகவல்களை வெளிப்படுத்தவில்லை என்றாலும் நீண்ட காலமாகச் சொல்லப்பட்ட புகாரை உறுதி செய்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பல காலமாக நல்லுறவு இருந்து வருகிறது. இந்திய ராணுவத்தில் கணிசமான ஆயுதங்களும் பாதுகாப்பு அமைப்புகளும் நாம் ரஷ்யாவிடம் இருந்தே வாங்கியுள்ளோம். இந்தச் சூழலில் தான் 'பிளாக் மிரர்' என்ற ஹேக்கர்கள் சில ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளன. அது இந்தியக் கடற்படை வட்டாரங்களில் நீண்ட காலமாக ரகசியமாகப் பேசப்பட்டு வந்த ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

பிரச்சினை என்ன
அதாவது, ரஷ்யா நமக்கு தரமற்ற பொருட்களை விற்றுள்ளன.. மேலும் அவை பழுதடைந்தவை என்று தெரிந்தும், அவை விரைவில் சரியான நிலையை அடையும் என்று நாம் நம்பிக் கொண்டி இருந்துள்ளோம். டிஃபென்ஸ் செக்யூரிட்டி ஆசியா என்ற ஆன்லைன் பாதுகாப்பு தளம் சமீபத்தில் இது தொடர்பாக ஒரு விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் இந்த மோசடியை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிக்-29கே ஜெட்களில் ஜுக்-எம்இ ரேடார் (Zhuk-ME radar) என்ற ரேடார் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய விமானந்தாங்கி கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவே பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த ரேடார்களில் பிழை இருப்பதால் ஒவ்வொரு முறையும் ஒரு பைலட் புறப்படும்போது இது ஆபத்தானதாக மாறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்ன பிரச்சினை இல்லை
ஏனென்றால், ஒரு ரேடார் பொதுவாக 150 மணி நேரம் பழுதடையாமல் செயல்பட வேண்டும். ஆனால் இந்த ஜுக் எம்இ ரேடார் 60 முதல் 90 மணி நேரத்திற்குள் பழுதடைந்துவிடுகிறதாம். இது சிறிய பிரச்சனை இல்லை. அடிப்படையிலேயே ஒரு பழுதடைந்த சிஸ்டம் நமக்கு விற்கப்பட்டுள்ளது. அதுவும் இது தவறுதலாகவும் நடக்கவில்லை. வேண்டும் என்றே இந்த மோசடி நடந்துள்ளது என்பது தான் இங்கு மிகவும் வருத்தமான விஷயம். ரஷ்ய இன்ஜினியர்கள் இந்தப் பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டது மட்டுமல்லாமல், சோதனைத் தரவுகளை வேண்டுமென்றே தவறாகக் காட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், உண்மையான சோதனைகளுக்குப் பதிலாக கம்பியூட்டர் டேட்டாவை பயன்படுத்தியுள்ளனர். சில சமயங்களில், போலி ரேடார்களை நிறுவி தவறான அறிக்கைகளையும் கூட தயாரித்துள்ளனர். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு மோசடி என்பதையே காட்டுகிறது. ஏற்றுமதி ஆவணங்களுக்கு இணங்கவும், அரசியல் பதற்றங்களைத் தவிர்க்கவும் ரேடார் டேட்டா மாற்றி அமைக்கப்பட்டதை ரஷ்ய இன்ஜினியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இதன் மூலம் அப்பட்டமாக ஒரு மோசடி நடந்துள்ளது உறுதியாகியுள்ளது..
மோசமான சிக்கல்
மேலும், இந்தியக் கடற்படைக்கும் கூட இது மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக உள்ளது. ஏனென்றால் ஒரு போர் விமானத்தின் ரேடார் என்பது வெறுமன ஒரு துணை சாதனம் அல்ல. அதுதான் முக்கிய கருவி.. ஒரு ஜெட் விமானம் போருக்குத் தயாராக இருக்கிறதா இல்லையா என்பதை அதில் உள்ள ரேடார் கருவிகளை முடிவு செய்கிறது.
நம்பகமான ரேடார் இல்லாமல், விமானிகளால் நீண்ட தொலைவுக்குச் சென்று தாக்குதல் நடத்த முடியாது. .கடலில் உள்ள கப்பல்களையும் கூட துல்லியமாகக் கண்காணிக்க முடியாது.. மேலும், மோசமான வானிலையில் பாதுகாப்பாகச் செல்ல முடியாது.. பைல்டகளுக்கு தெரிவுநிலை குறையும்போது நகர்ந்து கொண்டே இருக்கும் விமானந்தாங்கி கப்பலில் பாதுகாப்பாகத் தரையிறங்க முடியாது. ரேடார் சொதப்பினால் இப்படிப் பல சிக்கல்கள் உருவாகும்.
பலவீனம்
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் பிரச்சினை உள்ள ரேடார்களால் இந்தியப் பெருங்கடல் முழுவதும் தங்கள் பலத்தை வெளிப்படுத்த வேண்டிய இந்திய விமானந்தாங்கி கப்பல்கள், ஒரு கை கட்டப்பட்ட நிலையில் செயல்பட்டுள்ளன. 2019 நிலவரப்படி, இந்தியாவின் விமானந்தாங்கி போர் விமானங்களில் 15 முதல் 47 சதவீதம் மட்டுமே எந்த நேரத்திலும் பணிக்குத் தயாராக இருந்துள்ளது. இது நிலைமை எந்தளவுக்கு மோசமாகப் போய் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
மேலும், ரேடார் பிரச்சினை ஏற்பட இதை விட மோசமான நேரம் இருக்க முடியாது. ஒரு பக்கம் சீன கடற்படை இப்போது ஜே-15 விமானந்தாங்கி போர் விமானத்தை இயக்குகிறது. மேலும் ஸ்டெல்த் ஜே-35 ஐ உருவாக்கி வருகிறது. மறுபுறம் பாகிஸ்தானும் தனது கடற்படையைச் சீன சென்சார்கள் மற்றும் சீன ஏவுகணைகளுடன் மேம்படுத்தி வருகிறது.. அப்படியிருக்கும்போது இந்தியா ரோந்துப் பணிகளைத் தவிரப்படுத்த வேண்டும். ஆனால், அது மிக்-29கே விமானங்களை நிர்வகிப்பதில் சிக்கித் தவிக்கிறது.
ரூ.10,000 கோடி தவறு
இது முற்றிலும் தவிர்க்கக் கூடியது என்பதுதான் வேதனை தரும் விஷயமாக உள்ளது. இந்தியாவின் சிஏஐ அமைப்பு 2016ஆம் ஆண்டிலேயே மிக்-29கே திட்டத்தில் ஏற்பட்ட கடுமையான சிக்கல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. அதை ₹10,000 கோடி தவறு என்று குறிப்பிட்டுள்ளது. ரேடார் மட்டுமின்றி MiG-29K விமானத்தின் இன்ஜின்கள், விமான உடல்கள் மற்றும் ஏவியோனிக்ஸ் ஆகியவற்றில் ஏற்பட்ட தொடர்ச்சியான பிரச்சனைகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டது. குறிப்பாக இந்த விமானங்கள் 45% நேரம் மட்டுமே செயல்படும் நிலையில் இருந்ததாக சிஏஐ குறிப்பிட்டுள்ளது..
இருப்பினும், ரஷ்யாவின் ரெஸ்பான்ஸ் இதில் திருப்திகரமாக இல்லை. அரை மனதுடன் சில அப்டேட்களை மட்டும் கொடுத்துள்ளது. அதுவும் மிக மெதுவாக! இந்த அப்டேட்கள் பிரச்சினையைச் சரி செய்யவில்லை.. இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 62 ரேடார்களில், 2017-2018 காலகட்டத்தில் மூன்று ரேடார்களுக்கு மட்டுமே சில அப்டேட்கள் வழங்கப்பட்டன. ஆனாலும், அதிக ஈரப்பதம் உள்ள கடல் சூழ்நிலைகளில் சிக்னல் இழப்பு தொடர்ந்து ஏற்பட்டே வருவதாகச் சொல்லப்படுகிறது..
இந்தப் பிரச்சினைகளால் இந்தியா மாற்று வழிகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது. ஒரு பக்கம் ரபேல் விமானங்களைக் கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளது. இன்னொரு பக்கம் உள்நாட்டிலேயே தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications