டெல்லி போராட்டத்தில் கருப்புச் சட்டையோடு யார்னு பாருங்க.. கேரளா அரசோடு கை கோர்த்த அமைச்சர் பிடிஆர்!
டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக கேரளா அரசு நடத்தும் போராட்டத்தில் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதியன்று இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வரி பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தென் மாநில எம்.பிக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

கர்நாடகாவிற்கு உரிய வரி பங்கீட்டை வழங்காத மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார். அவரை தொடர்ந்து இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள முதல்வரின் இந்த போராட்டத்திற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.
இன்று நடைபெறும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான போராட்டத்தில் கருஞ்சட்டை அணிந்து திமுக எம்.பிக்களும் கலந்து கொள்வார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஜந்தர் மந்தரில் நடத்தி வரும் போராட்டத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மத்திய பாஜக அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் பதாகைகள் ஏந்தியபடி மத்திய அரசு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது, கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர் பேசினார்.
மாநிலத்தின் நலனுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கோரி மாநில அமைச்சர்கள் கோரிக்கை வைத்தால், வெளியுறவு அமைச்சர், திரும்பத் திரும்ப நிராகரிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் என குற்றம்சாட்டினார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.












Click it and Unblock the Notifications