மத்திய அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி, ஆர்சிபி சிங் திடீர் ராஜினாமா! அடுத்தடுத்து அறிவிப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் மத்திய உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி.சிங் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் வரும் ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக பாஜக கூட்டணி தரப்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி-க்கள் மற்றும் நியமன எம்பி-க்கள் வாக்களிப்பார்கள்.

வெற்றிவாய்ப்பு உறுதி
மொத்தமுள்ள 775 நாடாளுமன்ற எம்பி-க்களில் 388 எம்பிக்கள் வாக்களித்தால் குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பாஜக கூட்டணி வசம் 395 எம்பி-க்கள் இருப்பதால், பாஜக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி உறுதியாகி உள்ளது. இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்யா நாயுடு, அம்ரீந்தர் சிங், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்ததாக கூறப்பட்டது.

முக்தார் அப்பாஸ் நக்வி வேட்பாளர்?
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த முக்தார் அப்பாஸ் நக்வி திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதனால் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளருக்கான பரிசீலனையில் இவர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே பழங்குடியின பெண்ணான திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமியர் ஒருவரை குடியரசுத் துணை தலைவர் ஆக்குவது சிறந்த முடிவு என பாஜக மேலிடம் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு அமைச்சர்கள் ராஜினாமா
இதேபோல் மத்திய உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி.சிங் ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், இன்று ராஜினாமா செய்துள்ளார். ஒரே நாளில் இரு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications