பஞ்சாப் வயல்வெளியில் கிடந்த பாகிஸ்தானின் ஏவுகணை.. ஸ்பாட்டிற்கு வந்த அதிகாரிகள்.. திடீர் பரபரப்பு!
டெல்லி: பஞ்சாப் மாநிலம் பதின்டா அருகே பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ஏவுகணை இந்திய பாதுகாப்பு படையினரால் நடுவானில் அழிக்கப்பட்டது. நடுவானில் அழிக்கப்பட்ட அந்த ஏவுகணை வயல் வெளிகளில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஹோசியாபூரிலும் பாகிஸ்தானின் சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணை விழுந்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்று, அதனை செயலிழக்க செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியில் இருந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக அழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு 9 மணியளவில் இந்திய எல்லையோரக் கிராமங்களை குறி வைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதலை தொடங்கியது.

சுமார் 35 நிமிடங்களை நடந்த தாக்குதலை இந்திய பாதுகாப்புப் படை எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பான சுதர்சன் சக்ராவை பயன்படுத்தி முறியடித்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வான் வெளியிலேயே வைத்து எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. ஜம்மு, காஷ்மீர், பூன்ச், உரி, பஞ்சாப், ஜெய்சல்மார் உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது.
இந்திய எல்லையோரப் பகுதிகளில் சுமார் 15 இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்திய பாதுகாப்பு படை முறியடித்தது. அதுமட்டுமல்லாமல் நள்ளிரவிலேயே பாகிஸ்தானுக்கும் இந்திய ராணுவம் பதிலடியை கொடுக்க தொடங்கியது. இதனிடையே நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஏவுகணைகள் மக்கள் வசிக்கும் பல்வேறு இடங்களில் விழுந்துள்ளது.
இதனை மக்கள் பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் ஹோசியாபூரில் பாகிஸ்தானின் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டு, கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 100 கிமீ தூரத்திற்கு பறந்து வந்து விழுந்த ஏவுகணையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பாகிஸ்தானின் போர் விமானமான J10 அல்லது JF17ல் இருந்து இந்த ஏவுகணை வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதேபோல் பஞ்சாப் மாநிலத்தின் பதின்டா பகுதியிலும் நடுவானில் பாகிஸ்தானின் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த ஏவுகணை பதின்டா பகுதியில் உள்ள வயல்வெளியில் விழுந்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதனை செயலழிக்க செய்து பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications