அதிமுக வேட்பாளர்.. தென்னரசுக்கு ஆதரவாக பொதுக்குழுவில் 2,501 பேர் கடிதம்.. சிவி சண்முகம் பேட்டி!
தென்னரசுக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் ஆதரவளித்துள்ளனர்.
டெல்லி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட தென்னரசுக்கு ஆதரவாக 2,501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். தென்னரசுக்கு மறுப்பு தெரிவித்து யாரும் வாக்களிக்கவில்லை என்று கூறிய சிவி சண்முகம், 145 வாக்குகள் பதிவாகவில்லை என்று தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தின் உரிமை கேட்டு எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளரை பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்யுங்கள்.
பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் அனுமதிக்க வேண்டும். பொதுக்குழு முடிவு செய்யும் வேட்பாளரை அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.அவைத் தலைவரின் பரிந்துரை மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஓபிஎஸ் அணி புறக்கணிப்பு
இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கடிதம் மூலம் வேட்பாளர் தேர்வுக்கு ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்பாளர் தேர்வு படிவம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே வேட்பாளர் தேர்வு படிவத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் பெயர் இடம்பெறாததற்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் வேட்பாளர் படிவதத்தை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் பெறப்பட்ட வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக எம்பி சிவி சண்முகம், இன்பதுரை ஆகியோர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டவர். மதியம் 3 மணியளவில் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வேட்பாளர் ஒப்புதல் படிவம் சமர்ப்பிக்கப்பட்டது.

சிவி சண்முகம் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சிவி சண்முகம் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு சுற்றறிக்கை மூலம் கூட்டப்பட வேண்டும். அந்த பொதுக்குழுவில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யும் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் உரிமை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வழங்கப்பட்டது.

2,501 பேர் ஆதரவு
அதிமுகவில் மொத்தமாக 2,665 உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில் உயிரிழந்தவர்கள், மாற்றுக் கட்சிக்கு சென்றவர்கள் போக, மீதமுள்ள 2,646 பேர் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள். அவர்கள் அனைவருக்கும் அனைத்து வழிகளிலும் வேட்பாளர் தேர்வு படிவம் அனுப்பப்பட்டது.அதில் பொதுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக 2,501 பேர் வாக்கு அளித்துள்ளனர்.

145 வாக்குகள் பதிவில்லை
அதில் மறுப்பு என்று எந்த வாக்கும் வரவில்லை. ஆனால் 145 வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை. அந்த படிவங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்திருக்கிறோம். இதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தரப்பில் ஆவணம் செய்வதாக கூறி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் பற்றி கருத்து
தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றது பற்றிய கேள்விக்கு, ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை என்று சொல்வார்கள். அந்த கதை பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications