ஹெலிகாப்டர் விபத்து: இன்று டெல்லி கொண்டு செல்லப்படும் பிபின் ராவத் உடல்.. நாளை இறுதிச்சடங்கு
டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று மாலை டெல்லி கொண்டு வரப்படும். நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
குன்னூர் அருகேயுள்ள காட்டேரி வனப் பகுதியில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்தனர். இதில் 13 பேர் உயிரிழந்ததை விமானப் படை உறுதி செய்திருந்தது. இருப்பினும், இதில் பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் இறந்ததை இந்திய விமானப்படை மாலை 6.03 மணிக்கு ட்வீட் செய்து உறுதிப்படுத்தியது.

இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒருவர் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும்தான். அவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். "குரூப் கேப்டன் வருண் சிங் எஸ்சி, டிஎஸ்எஸ்சியில் பணியாற்றுகிறார். காயங்களுடன் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்" என்று விமானப்படை உறுதி செய்தது.
ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று மாலை டெல்லி கொண்டு வரப்படும். இதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர், பிபின் ராவத் உடலுக்கு, அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்த நிலையில் முப்படை தளபதி பிபின் ராவத் உடல் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு 10-ம் தேதி டெல்லியில் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் 10-ம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications