மும்பை தாக்குதல்: பயங்கரவாதி ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி
டெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கின் குற்றவாளியான தஹாவூர் ராணாவை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சியானா என்.ஐ.ஏவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகரில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடப்பட்டது. இதில், 175 பேர் கொல்லப்பட்டனர். நவம்பர் 26 ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 10 பயங்கரவாதிகள் மும்பையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். கண்ணில் பட்ட மக்களை துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் இந்தியாவையே அதிரச் செய்தது.

இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் வம்சாவளியும், அமெரிக்க குடியுரிமை பெற்றவருமான டேவிட் கோல்மன் ஹெட்லி என்ற தாவூத் கிலானி மற்றும் பாகிஸ்தானில் பிறந்த கனடா தொழில் அதிபர் தஹாவூர் ராணா (64) ஆகிய இருவரும் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
டேவிட் கோல்மன் ஹெட்லி கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிடிபட்டார். அங்கு பயங்கரவாதத்தில் ஈடுபட்டதால் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். தஹாவூர் ராணாவும் அதே ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தஹாவூர் ராணை இந்தியாவிடம் ஒப்படைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பிடமும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா நீதிமன்ற உத்தரவுப்படி ராணா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதனையடுத்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சிறப்பு விமானம் மூலம் ராணாவை இந்தியா அழைத்து வந்தனர். இந்த விமானம் டெல்லி வந்தடைந்ததும் அவரை முறைப்படி என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். என்ஐஏ நீதிமன்ற சிறப்பு நீதிபதி முன்பு என்ஐஏ அதிகாரிகள் ராணாவை நேற்று இரவு ஆஜர்படுத்தினர். 20 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனு செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து ராணாவிடம் என்.ஐ.ஏ.போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications