லட்சக்கணக்கானோரை ஈர்த்த.. டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சி! 20% பேர் கூடுதலாக வருகை!
டெல்லி: தேசிய புத்தக அறக்கட்டளை, ஏற்பாடு செய்த 53ஆவது புது டெல்லி உலக புத்தக கண்காட்சிக்கு, இந்த ஆண்டு பார்வையாளர் 20% கூடுதலாக வருகை தந்திருக்கின்றனர். புத்தக விற்பனையும் 30% அதிகரித்திருக்கிறது.
பார்வையாளர்கள் வருகை அதிகரிப்புக்கும், புத்தக விற்பனை அதிகரிப்புக்கும் காரணம் இலவச நுழைவு அனுமதிதான் என்று சொல்லப்படுகிறது. ஜனவரி 19, 2026 அன்று நிறைவடைந்த இந்தக் கண்காட்சி, தனது இறுதி நாள் வரையிலும் பெரும் கூட்டத்தை ஈர்த்தது.

புத்தக கண்காட்சி
இந்த புத்தக கண்காட்சி, தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் இணைந்து நடத்தி இருந்தது. மொத்தம் 9 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இந்த முறை பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டை விட பார்வையாளர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்தது. அதேபோல புத்தக விற்பனை 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
35க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த, 1000க்கும் அதிகமான பதிப்பாளர்கள் இந்த புத்தக கண்காட்சியில் பங்கேற்றனர். கத்தார் கௌரவ விருந்தினர் நாடாக இந்த கண்காட்சியில் பங்கேற்று இருந்தது. அதேபோல ஸ்பெயின், சிறப்பு நாடாகவும் கண்காட்சியில் பங்கேற்றிருந்தது.
உலக நாடுகளின் பங்களிப்பு
ஸ்பெயின், ஆஸ்திரியா, உக்ரைன், ஈரான், இஸ்ரேல், ஜப்பான், துருக்கி, சிலி உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த குழுக்கள், இலக்கியம், இயற்கை, சகவாழ்வு, புலம்பெயர்தல், மொழிபெயர்ப்பு, குழந்தைகள் இலக்கியம், நாடகம் மற்றும் இலக்கிய மொழிபெயர்ப்பில் செயற்கை நுண்ணறிவின் நெறிமுறைகள் போன்ற பல தலைப்புகளில் அமர்வுகள் மூலம் பார்வையாளர்களை ஈர்த்தனர்.
முக்கிய அரங்கு
இந்த புத்தக கண்காட்சியின் முக்கிய அம்சமாக, 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட.. இந்திய 'ராணுவ வரலாறு, வீரம் மற்றும் ஞானம் 75' என்கிற அரங்கம் கவனம் ஈர்த்திருந்து. இந்த அரங்கில், அர்ஜுன் டேங்க். ஐஎன்எஸ் விக்ராந்த், மற்றும் தேஜஸ் போர் விமானத்தின் தத்ரூப மாதிரிகள் இந்த அரங்கில் வைக்கப்பட்டிருந்தன.
இந்திய ராணுவம்
21 பரம்பீர் சக்ரா விருது பெற்றவர்களின், வீர தீர செயல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ராணுவ தளபதி உபேந்திரா திவேதி மற்றும் கடற்கரை தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் வருகை தந்து வாசகர்களுடன் கலந்துரையாடி இருந்தனர். அதேபோல மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்காட்சியை தொடங்கி வைத்திருந்தார். மத்திய அமைச்சர்கள், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இதில் பங்கேற்றிருந்தனர். குழந்தைகளுக்காக தனியரங்கம் அமைக்கப்பட்டு, கதை சொல்லுதல், நாடகம், சித்திரக்கலை மற்றும் வேத கணிதம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அடுத்த ஆண்டும் இலவசம்
பதிப்பாளர்களுக்காக.. காப்புரிமை பரிமாற்றத்திற்காக, நியூ டெல்லி ரைட்ஸ் டேபிள் , சி இ ஓ ஸ்பீக் போன்ற பிசினஸ் நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன. இந்த ஆண்டு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து, அடுத்த ஆண்டுக்கான தேதியையும் தேசிய புத்தக அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 16 முதல் 24ஆம் தேதி வரை இந்த புத்த கண்காட்சி நடைபெறும். அடுத்த ஆண்டும் பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications