45+ வயதினருக்கு தடுப்பூசி போடுவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.. மத்திய அரசு தகவல்!
டெல்லி: 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதலில் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர்வி.கே. பால் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முதலில் மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்தகட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட இருந்த நிலையில் தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் பல மாநிலங்களில் தொடங்கவில்லை. ஆனால் இதனை செயல்படுத்தி வந்த டெல்லி அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் சுகாதார அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் பேசியதாவது:- கூடுதலாக, மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு வசதி செய்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்படக்கூடிய 45-க்கும் மேற்பட்டவர்கள் அனைவருக்கும் முதலில் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என்பதில் அரசு தெளிவாக உள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய ஆறு மாநிலங்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை பதிவு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications