ரொம்ப ஸ்லோ.. அரசு முடிவெடுக்க அதிக நேரம் எடுக்கிறது.! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீர் விமர்சனம்
டெல்லி: மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் கருத்து கூறியுள்ளார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் சார்பில் NATCON 2022 என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ள சில கருத்துகளைச் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

பேச்சு
அந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, "நீங்கள் (பொறியாளர்கள்) அற்புதங்களைச் செய்ய முடியும். அதற்கான சாத்தியங்கள் உள்ளன. என்னைப் பொறுத்தவரை இந்திய உள்கட்டமைப்பின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாகவே இருக்கிறது உள்ளது. நமது நாட்டில் நல்ல தொழில்நுட்பம், நல்ல கண்டுபிடிப்பு, நல்ல ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தரத்தில் சமரசம் செய்யாமல் செலவைக் குறைக்க ஏதுவாக நம்மிடம் மாற்று வழிகள் இருக்க வேண்டும்.

ரொம்ப மெதுவாக
கட்டுமானத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான விஷயம் நேரம் தான். கட்டுமானத்தில் மற்ற விஷயங்களைக் காட்டிலும் நேரம் தான் மிகப்பெரிய மூலதனம். ஆனால், நமக்குப் பெரிய பிரச்சினை உள்ளது. அதாவது அரசு சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காததே நமக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. கட்டுமானத்தில் நேரமே தொழில்நுட்பம் உள்ளிட்ட எந்தவொரு மூலதனத்தை விட முக்கியமானது" என்றார்.

விளக்கம்
மத்திய அமைச்சர் ஒருவரே அரசு சரியான நேரத்தில் முடிவுகள் எடுப்பதில்லை என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், அவர் குறிப்பிட்டு எந்த அரசையும் சொல்லவில்லை என்றும் பொதுவாக அரசு என்ற அமைப்பில் இருக்கும் சிக்கலையே அவர் குறிப்பிடுகிறார் என்றும் பாஜகவினர் விளக்கம் அளித்து உள்ளனர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு வாஜ்பாய், எல்.கே. அத்வானி மற்றும் தீன்தயாள் உபாத்யாயா உள்ளிட்டோரின் உழைப்பே காரணம் என கூறினார்

முதல்முறை இல்லை
அதேநேரம் நிதின் கட்கரி இதுபோல சர்ச்சை கருத்துகளைக் கூறுவது இது முதல்முறை இல்லை. சமீபத்தில் நாக்பூரில் நடந்த ஒரு நிகழ்வில், இன்றைய அரசியல் அதிகாரத்தைப் பிடிப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் இதனால் சில சமயங்களில் அரசியலில் இருந்து விலக நினைத்ததாகவும் குறிப்பிட்டார். இப்படிப் பல நேரங்களில் மறைமுகமாகச் சொந்த கட்சியையே அவர் சாடும் வகையில் கருத்துகளைக் கூறி உள்ளார்.

ஆச்சரியம்
கடந்த வாரம், 2024 தேசியத் தேர்தல் உட்பட தேர்தலுக்கான திட்டங்களை முடிவு செய்யும் பாஜகவின் சக்திவாய்ந்த நாடாளுமன்றக் குழுவிலிருந்து கட்கரி நீக்கப்பட்டார். முன்னாள் பாஜக தலைவரும் வலுவான ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட நிதின் கட்கரி இந்த குழுவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பொதுவாக இந்த குழுவில் பாஜக முன்னாள் தலைவர்கள் எப்போதும் இருப்பார்கள்.












Click it and Unblock the Notifications