சுங்க சாவடிகள் நிரந்தரமானவை அவை மூடப்படாது! திமுக எம்பி வில்சன் கேள்விக்கு நிதின் கட்கரி பதில்
டெல்லி: போடப்பட்ட முதலீட்டை திரும்ப எடுத்த பிறகு நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படுமா? என்று திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "சுங்கச்சாவடிகள் நிரந்தரமானவை. அவை அகற்றப்படாது" என்று கூறியிருக்கிறார்.
நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. வாகனங்களை வாங்கும்போது சாலை வரி என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தவிர மக்கள் வரிப்பணத்தில்தான் சாலைகள் அமைக்கப்படுகின்றன. அப்படி இருக்கையில் எதற்கு தனியாக சுங்கச்சாவடி கட்டணம்? இந்த கட்டணம் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் இது பற்றி பேசிய திமுக எம்பி வில்சன், "சாலையை அமைக்க முதலீடு செய்தவர்கள் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகள் மூலம் அதற்கான தொகையை வசூலிக்கின்றனர். முதலீடு தொகை முழுவதுமாக வந்த பிறகு சுங்கச்சாவடிகள் அகற்றப்படுமா? இதற்கு ஏதாவது தணிக்கை நடைமுறை இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய கட்கரி, "முன்பு டோல் என்று அழைக்கப்பட்ட கட்டணம் தற்போது பயன்பாட்டு கட்டணம் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இது நிரந்தரமான நடவடிக்கை. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின் அடிப்படையில்தான் இதில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை சாலை அமைக்க செய்யப்பட்ட முதலீடு மீண்டும் கிடைத்துவிட்டால் சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பாக எந்த யோசனையும் இல்லை.
தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் - 2008ன்படி, ஒரு சாலை தனியார் உதவியுடன் அமைக்கப்படுகிறது எனில், அதற்கான கட்டணத்தை ஒப்பந்த காலம் முடியும் வரை வசூலிக்கலாம். ஒப்பந்தம் முடிந்த பின்னர் அரசு நேரடியாகவோ, அரசு கை காட்டும் அமைப்போ கட்டண வசூலில் ஈடுபடும். இந்த கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் திருத்தி அமைக்கப்படும். இதனால் சுங்க சாவடியை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை.
தமிழ்நாட்டில் 1,046 கி.மீ., துாரத்துக்கு, 38,359 கோடி ரூபாய் செலவில், 48 நெடுஞ்சாலை பணிகள் நடக்கின்றன. இது 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடியவடையும். இருப்பினும் நிலத்தை கையகப்படுத்துவது, நிலத்தின் வகையை மாற்றுவது, மழைக்காலங்களில் சாலை பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று பிறக்கப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவு, சரியான ஒப்பந்ததாரர்கள் கிடைக்காதது போன்றவற்றால் பணிகளில் இழுபறி நீடிக்கப்படலாம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications