தமிழகம் உள்பட பிற மாநிலங்களிலும் எந்த மொழியும் திணிக்கப்படாது.. ராஜ்யசபாவில் மத்திய அரசு உறுதி
டெல்லி: எந்த மாநிலங்களிலும் மத்திய அரசு மொழியை திணிக்கவில்லை என்று ராஜ்யசபாவில் பாஜக எம்பி டாக்டர் சுகந்த மஜூம்தார் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு சார்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மும்மொழி கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. இந்த மும்மொழி கொள்கை என்பது தமிழகத்தில் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் தொடரும். மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்கிறது. இதனால் மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடைய தான் மும்மொழியை கொள்கையை ஏற்காதததால் மத்திய அரசு சார்பில் வழங்கும் கல்விக்கான நிதி என்பது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடந்து வருகிறது. இதுதொடர்பாக மும்மொழி கொள்கை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டஸ் ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பி இருந்தார். அதாவது ‛‛தேசிய கல்வி கொள்கை 2020 என்பது இந்தி திணிப்பு குறித்த கவலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி மத்திய அரசு அறிந்து வைத்துள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக மத்திய கல்வித்துறை இணையமைச்சரான சுகந்தா மஜூம்தார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய கல்வி கொள்கை 2020 பத்தி 4.12ல் குறிப்பிட்டு உள்ளதன் படி அரசியலமைப்பு விதி, மக்கள், பிராந்தியம் உள்ளிட்டவற்றின் விருப்பம் மற்றும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் மும்மொழி கொள்கை என்பது செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மும்மொழி கொள்கையின்படி எந்த மாநிலத்திலும் மொழிகள் திணிக்கப்படாது. பள்ளிகளில் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் 3 மொழிகள் என்பது மாநிலம் மற்றும் பிராந்தியங்களில் மாணவர்களின் சாய்ஸாக தான் இருக்கும். இந்த 3 மொழியில் 2 மொழிகள் இந்திய மொழியாக இருக்க வேண்டும். குழந்தைகள் 2 வயது முதல் 8 வயதுக்குள் மொழிகளை விரைவாக கற்றுக்கொள்கிறார்கள். இதனால் பன்மொழி பேச்சு இளம் மாணவர்களுக்கு நன்மை தரும். இதனால் தாய் மொழிக்கு முக்கியத்துவத்துடன் 3 மொழியை கற்க தான் புதிய கல்வி கொள்கை என்பது வழிவகுத்து கொடுக்கிறது'' என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டம் என்பது இந்தியா முழுவதும் பேசும்பொருளாக உள்ளது. காங்கிரஸ் உள்பட பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள் தமிழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேவேளையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழகத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட பாஜக கூட்டணியில் உள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், ‛‛தமிழ் திரைப்படத்தை இந்தியில் டப்பிங் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். பணம் சம்பாதிக்க மட்டும் இந்தி வேண்டுமா?'' என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கனிமொழி எம்பி உள்பட பல தலைவர்கள் பவன் கல்யாணை விமர்சனம் செய்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications