"இது குப்பை.." கம்பீர் அறக்கட்டளை தொடர்பாக.. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையை சாடிய ஐகோர்ட்
டெல்லி: பாஜக எம்பி கவுதம் கம்பீருக்கு சொந்தமான அறக்கட்டளை அதிகளவிலான கொரோனா மருந்துகளை வாங்கியது எப்படி என்பது தொடர்பாக மருந்து கட்டுப்பாடு அமைப்பு தாக்கல் செய்த அறிக்கை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்றும் புதிய அறிக்கையை வரும் வியாழக்கிழமைக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாட்டில் தற்போது தான் கொரோனா பரவலின் 2ஆம் அலை மெல்ல குறைந்து வருகிறது. ஆனாலும், வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், பாஜக எம்பி கவுதம் கம்பீரின் அறக்கட்டளை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் Fabiflu மருந்து வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கவுதம் கம்பீர்
இந்த மருந்துகளுக்கு மாநிலங்களில் பற்றாக்குறை இருக்கும்போது அவருக்குத் தடுப்பூசி கிடைத்தது எப்படி என்றும் பலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், இது தொடர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, தனது அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. அதில் கவுதம் கம்பீர் அறக்கட்டளை கொரோனா மருந்துகளை விநியோகிப்பது மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டத்தில் விதிவிலக்கு பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

நீதிபதிகள் அதிருப்தி
ஏனென்றால், கார்க் மருத்துவமனையின் மருத்துவரின் மேற்பார்வையில் நடந்த மருத்துவ முகாமில் தான் இந்த மருந்தை அவர்கள் வழங்கியுள்ளனர். இந்தச் சட்டம், தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் தங்கள் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குவதில் விலக்கு அளிக்கிறது" என தெரிவித்திருந்தது. ஆனால், இந்த அறிக்கையால் நீதிபதிகள் கடுமையாக அதிருப்தி அடைந்தனர்.

இது குப்பை
அப்போது நீதிபதிகள் கூறுகையில், "இந்த அறிக்கையைப் பார்த்ததும் நாங்கள் நம்பிக்கை முற்றிலுமாக இழந்துவிட்டோம். மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிற்குத் தனது வேலையைச் செய்ய ஆர்வமில்லை என்றால் அவர்கள் அகற்றப்பட வேண்டும். வேறு யாராவது பொறுப்பேற்கட்டும். இது ஒரு அறிக்கையா? இது குப்பை. இதற்கு சட்டப்பூர்வமான எந்த அடிப்படையும் இல்லை" எனக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தனர்.

எப்படி இவ்வளவு மருந்துகள்
மேலும், நீதிபதிகள் கூறுகையில், "மருத்துவராக இல்லாத ஒரு அறக்கட்டளைக்கு இவ்வளவு மருந்துகளை எப்படி வழங்க முடியும்? மருத்துவராக இருந்தாலும், ஒரே நேரத்தில் ஒருவரால் எப்படி 4000 மருந்துகளை வாங்க முடியும். இந்த மருந்திற்குப் பற்றாக்குறை இல்லை எனக் கூற வேண்டாம். இந்த மருந்திற்குப் பற்றாக்குறை இருந்தது அனைவருக்கும் தெரியும். நாங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இதுபோன்ற தவறான அறிக்கையிலிருந்து நீங்கள் தப்பித்து விடுவீர்கள் என்று நினைக்கிறீர்கள். எங்கள் எளிதாக ஏமாற்றிவிடலாம் என்று நீங்கள் நினைத்தால் அதற்குக் கடுமையாகப் பதிலை கண்டிப்பாகக் கொடுப்போம்" என்றனர்.

தேவையா நடவடிக்கை
முன்னதாக, மக்களுக்கு மருந்துகள் தேவை என்றால் மீண்டும் இதைச் செய்வேன் எனக் கவுதம் கம்பீர் தெரிவித்திருந்தார். அவரது கருத்து குறித்து நீதிமன்றம் கூறுகையில், "மீண்டும் அவர் இதைச் செய்தால், பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என எங்களுக்குத் தெரியும். அதற்கான நடவடிக்கையையும் நாங்கள் எடுப்போம். "நாட்டில் ஏற்படும் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் தியாகிகளாக தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். ஆனால், இந்த நெருக்கடியை உருவாக்குவதே அவர்கள்தான். எனவே, இது போன்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications