அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை.. பலமுறை சொல்லிவிட்டேன்.. அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி பேட்டி!
டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமில்லை என பலமுறை சொல்லிவிட்டேன், அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா சேர்வதற்கு வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து தமிழகம் வந்திருந்த அமித்ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். இதனையடுத்து டெல்லி சென்ற எஸ்.பி.வேலுமணி பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் தற்போது அமித்ஷாவை அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார். 2026-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியே வெற்றி பெறும். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்." என்றார்.
மேலும், "பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று திமுக வாக்குறுதி கொடுத்தது. அவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தவுடன் புதிதாக ஒரு ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது. மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்துக்கும், தமிழக அரசு ஓய்வூதியத் திட்டத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பெயரை மட்டுமே மாற்றியிருக்கிறார்கள். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
சசிகலாவுக்கு அதிமுகவில் எப்போதுமே இடம் இல்லை. டிடிவி தினகரன். ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை. அமித் ஷா வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வந்ததால் அவரை தமிழகம் வந்த போது சந்திக்கவில்லை. கூட்டணி அமைப்பது தொடர்பாக பிற கட்சிகளுடன் பேசி வருகிறோம்.
கூட்டணியின் வலிமை மூலம் தமிழ்நாட்டில் மாற்றம் கொண்டுவர முடியும். அமித் ஷா உடனான சந்திப்பு கூட்டணியை மேலும் பலப்படுத்தும். கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications