பகுத்தறிவற்ற அவமானகரமான நடவடிக்கை.. சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை ரத்து குறித்து ப.சிதம்பரம் சாடல்
மௌலானா ஆசாத் கல்வி உதவி தொகை மூலம் ஆண்டுக்கு இரண்டு முறை என மொத்தம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
டெல்லி: ஆராய்ச்சி மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் தேசிய உதவித்தொகையை(MANF) சமீபத்தில் மத்திய அரசு நிறுத்துவதாக அறிவித்தது. இந்நடவடிக்கைக்கு இடதுசாரிகளும், மாணவர்களும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரசின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மத்திய அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
சுதந்திர போராட்ட தியாகியும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சருமான மௌலான ஆசாத் பெயரில் கடந்த 2009ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் மாணவர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ளும் ஆய்வில் திருப்தி இருக்கும் பட்சத்தில் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை நீடிக்கப்படும்.
இந்த உதவித்தொகையின் மூலம் இஸ்லாம், கிறிஸ்தவம், புத்தம், பார்சி, சீக்கியம், சமணம் என ஆறு சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த உதவித்தொகை நிறுத்தப்படுவதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்தார். இதற்கு இடதுசாரிகள் சார்பிலும் மாணவர் சங்கங்கள் சார்பிலும் கடும் எதிர்ப்பு மேலெழுந்தது. மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட தொடங்கினர்.

திமுக
இது குறித்து திமுகவும் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. இது குறித்து திமுகவின் மகளிர் அணி மாநிலத் துணைச் செயலாளரும், எழுத்தாளுமான சல்மா கூறுகையில், "சிறுபான்மையினர் எந்த விதத்திலும் முன்னேறிவிடக்கூடாது என்கிற நோக்கத்தில்தான் இதுபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அரசின் நோக்கம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாக இருக்க வேண்டும். ஆனால் பாஜக அரசு தனது நாட்டு குடிமக்களையே மத வேறுபாடு காரணமாக படிக்க விடாமல் தடுக்கிறது. அவர்கள் முன்னேறுவது குறித்து பதற்றம் கொள்கிறது" என்று விமர்சித்திருந்தார்.

சிபிஎம்
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில், "மௌலானா ஆசாத் கல்வி உதவி தொகையை (MANF) மத்திய அரசு தடை செய்திருக்கக்கூடாது. எனவே இதனை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட உதவிதொகை திட்டம் நடைமுறையில் இருப்பதால்தான் மொளலானா ஆசாத் உதவி தொகை திட்டத்தை நிறுத்துவதாக கூறியுள்ளது. ஆனால் பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் OBCகளாக கருதப்படுவதில்லை" என்று கூறியுள்ளது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பகுத்தறிவற்றது
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "மௌலானா ஆசாத் நேஷனல் பெல்லோஷிப் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்க வழக்கப்பட்டு வந்த கல்வி கடனும் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு சொல்லும் காரணம் முற்றிலும் பகுத்தறிவற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட கல்வி உதவித்தொகை திட்டங்கள் இருப்பது உண்மைதான். ஆனால் அதனை காரணம் காட்டி சிறுபான்மையினரின் உதவி தொகை திட்டத்தை நிறுத்தி வைக்கப்படுமா என்ன? மகாத்மாக காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை போன்று பிஎம் கிஸான் திட்டமும் இருக்கிறது. இது போன்று ஏரளாமான திட்டங்கள் இருக்கின்றன.

அவமானத்திற்குரிய நடவடிக்கை
இதனையறிந்தும் சிறுபான்மையினர் மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் அவமானத்திற்குறியவை" என்று விமர்சித்துள்ளார். நாடுமுழுவதும் பல்கலைக்கழகத்தின் மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பயிலும் சிறுபான்மையினர் மாணவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களில் தகுதியான மாணவர்களை யுஜிசி தேர்வு செய்யும். இந்த தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெற்று வந்தது.












Click it and Unblock the Notifications