பழைய சட்டங்களை அப்படியே காப்பி பேஸ்ட் செஞ்சுட்டு புது சட்டம்னு சொல்றாங்க.. ப.சிதம்பரம் கடும் தாக்கு
டெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், பழைய சட்டங்களிலிருந்து 90-99% வெட்டி எடுத்து ஒட்டப்பட்டு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் கடந்த 1860 தொடங்கி நேற்று வரை இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் என மூன்று சட்டங்கள் அமலில் இருந்து வந்தன. இப்படி இருக்கையில், இந்த சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் என 3 புதிய குற்றவியல் சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் இன்று முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்த சட்டங்களில் பல முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. குறிப்பாக பழைய சட்டங்களில் குற்றம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில்தான் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்படும். ஆனால், புதிய சட்டங்கள் மூலம் எந்த காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யலாம்.
இது ஜீரோ எஃப்ஐஆர் என்று சொல்லப்படுகிறது. அதேபோல புதிய குற்றவியல் சட்டங்களின்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற அமசங்கள் இருக்கின்றன.
அதேபோல காவல் துறையிடம் இணையவழியில் புகார்களைப் பதிவு செய்தல், குறுந்தகவல் போன்ற மின்னணு வழிகளில் அழைப்பாணைகள் அனுப்புதல், அனைத்து கொடிய குற்றங்களிலும் குற்றம் நடைபெற்ற இடங்களை கட்டாயம் காணொலி வழியில் பதிவு செய்தல் போன்றவை புதிய குற்றவியல் சட்டங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய குற்றவியல் சட்டங்களில் சில மோசமான திருத்தங்கள் இருப்பதாகவும் இதனால் நாட்டில் அமைதியின்மை நிலவ வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் பல்வேறு மாநில பார் கவுன்சில்கள் உள்ளிட்டவைகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த சட்டங்கள் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது x தள பக்கத்தில், "மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. ஆனால், பழைய சட்டங்களில் சில திருத்தங்களை செய்வதற்கு பதில், அதிலிருந்து கட், காபி, பேஸ் செய்யப்பட்டு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. புதிய சட்டங்களில் சில சிறப்பம்சங்கள் உள்ளன. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால், பழைய சட்டங்களிலேயே இதனை திருத்தம் செய்திருக்கலாம். சிறப்பம்சங்களை வரவேற்றும் அதேவேலையில், இதில் உள்ள சில பிறபோக்கு அம்சங்களும் விமர்சிக்கப்பட வேண்டியவையாக இருக்கிறது. புதிய சட்டத்தில் உள்ள சில மாற்றங்கள் அரசியல் சட்டத்திற்கு முரணாக இருக்கின்றன. இந்த சட்டத்திற்கான மசோதா நாடாளுமன்ற நிலை குழுவுக்கு வந்தபோது ஏராளமான திருத்தங்கள் தொடர்பான கருத்துக்களை எம்பிக்கள் முன்வைத்திருந்தனர்.
இது குறித்து எந்த விவாதமும் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை. அதேபோல எம்பிக்களின் கருத்துகள் குறித்து மத்திய அரசு பதிலளிக்கவில்லை. சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், நீதிபதிகள் என பலரும் கூட இந்த சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், மத்திய அரசு தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் இல்லை.
எனவே இதனை ரத்து செய்துவிட்டு விவாதங்கள் மூலமாக போதுமான திருத்தங்களை செய்யப்பட்ட சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதித்துறையின் நவீன கோட்பாடுகளுக்கு இணங்க, எதிர்காலத்திற்கு பொருந்தும் வகையில், மூன்று சட்டங்களில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications