ஏழைகளுக்கு எதுவும் இல்லாத அறிவிப்புகள்... நிர்மலா சீதாராமன் உரை குறித்து காங்கிரஸ் கருத்து
டெல்லி: மத்திய அரசின் அறிவிப்பில் ஏழை எளிய மக்களுக்கும், புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் எதுவும் இல்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு உதவித் திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றிய நிலையில், அது தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பார்வையை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவு செய்துள்ளார்.

தினக்கூலியை நம்பி வாழ்க்கை நடத்துவோருக்கு தேவையான எந்த ஒரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என அவர் விமர்சித்துள்ளார். மேலும், சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பு திருப்திகரமாக இல்லை எனவும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு தனது அறியாமையாலும், அச்சத்தாலும் கைதியாக உள்ளதாகவும், ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டத்தில் ரூ.3.6 லட்சம் கோடிக்கான திட்டம் மட்டுமே இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய ரூ.16.4 லட்சம் கோடிக்கான திட்டங்கள் எங்கே எனவும் ப.சிதம்பரம் வினவியுள்ளார்.
அரசாங்கம் அதிகம் செலவு செய்ய வேண்டும்; அதிகம் கடன் பெற வேண்டும், ஆனால் அவ்வாறு இந்த அரசு செய்யாது என சிதம்பரம் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி நேற்றிரவு ஆற்றிய உரையில் காங்கிரஸ் மீதான விமர்சனத்தை எடுத்துரைத்தாரே தவிர புலம் பெயர் தொழிலாளர்களை பற்றி ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை என சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், லட்சக்கணக்கானோர் ஊரடங்கால் பசி பட்டினால் வாடுவது குறித்தோ, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் பூர்வீகத்தை நோக்கி தற்போது நடந்து செல்வது பற்றியோ மத்திய அரசு பேசவில்லை சுட்டிக்காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications
