4 மணி நேரம் காரசார வாதம்.. பிரசாந்த் பூஷன் விடாப்பிடி.. வேதனையாக இருக்கிறது- உச்சநீதிமன்றம் கருத்து
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே குறித்து, டுவிட்டரில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சர்ச்சைக்குரிய கருத்து கூறிய வழக்கில், அவருக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் மற்றும் பிரசாந்த் பூஷன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தவான் ஆகியோர் வாதம் முன்வைத்தனர்.
இவர்கள் வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம் தனது கருத்தை முன்வைத்தது. இவ்வாறு மூன்று தரப்புக்கு இடையே என்று காரசாரமாக விவாதம் உச்சநீதிமன்றத்தில் அரங்கேறியது.
கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, ஒரு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு படத்தை டுவிட்டரில் வெளியிட்டார் பூஷன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நான்கு பேரின் பங்களிப்பு பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

மன்னிப்பு கேட்கவில்லை
இதுதொடர்பான வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், இது நீதிமன்ற அவமதிப்பு என்று கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இருப்பினும், தண்டனை வழங்காமல் பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்கலாம் என்று கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம். ஆனால், பிரசாந்த் பூஷன், தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை, நீதிமன்றம் வழங்கும் தண்டனையை ஏற்கத் தயார் என்று கூறிவிட்டார்.

பிரசாந்த் பூஷன் தரப்பு வாதம்
இன்று இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் வந்தது. பிரசாந்த் பூஷனுக்கு எந்த மாதிரி தண்டனை வழங்குவது என்பது பற்றிய வாத விவாதங்கள் நடைபெற்றன. பிரசாந்த் பூஷன் தரப்பில் ஆஜரான ராஜீவ் தவான் தனது வாதத்தில் இவ்வாறு முன்வைத்தார். பிரசாந்த் பூஷன் நீதிமன்றத்திற்கு எதிராக செயல்படக் கூடியவர் கிடையாது. இந்த நீதிமன்றத்திற்கு அவர் பல்வேறு பங்களிப்புகளைச் செய்துள்ளார். இந்த விஷயத்தை இத்துடன் முடித்து விடுவது நல்லது.

தியாகியாகிவிடுவார்
ஒருவேளை பிரசாந்த் பூஷன் தண்டிக்கப்பட்டால் ஒரு தரப்பினர் அவரை தியாகி என்று கருதுவார்கள். அவர் தியாகியாக மாறுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. சில தரப்பினர் அவருக்கு தக்க தண்டனை கிடைத்துள்ளது என்று கருதுவார்கள். எப்படி இருந்தாலும் இந்த விவகாரம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும். இந்த விவகாரத்தை இத்தோடு முடிக்க வேண்டுமானால் நீதிமன்றம், பிரசாந்த் பூஷன் தண்டனை வழங்காமல் தவிர்ப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும். இவ்வாறு தவான் தனது வாதத்தை முன்வைத்தார்.

தண்டனை வேண்டாமே
மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தனது வாதத்தில் கூறியதை பாருங்கள்: நீதிமன்றம் எச்சரிக்கை கொடுக்கலாம், தண்டனை வழங்காமல் தவிர்க்கலாம். மறுபடியும் இதே போல நீங்கள் வருங்காலத்தில் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஒரு உத்தரவு இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

இப்போதும் வாய்ப்பு உள்ளது
இரண்டு சிபிஐ அதிகாரிகள் மோதிக் கொண்ட ஒரு வழக்கு தொடர்பாக நான் ஆவணங்களை மோசடி செய்து விட்டேன் என்று பிரசாந்த் பூஷன் கூறியிருந்தார். இதற்காக நானே அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், அவர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார். எனவே நான் வழக்கு தொடரவில்லை. பிரசாந்த் பூஷனை இத்தோடு நீதிமன்றம் விட்டு விட்டால் நான் அதனை மிகவும் வரவேற்பேன். ஒருவேளை அவர் தான் தவறு ஏதும் செய்யவில்லை என்று வாதத்தை முன் வைத்தால் கூட அதை நீதிமன்றம் பெருந்தன்மையோடு மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பார் கவுனிசிலுக்காகவும்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். இப்போது கூட நேரமிருக்கிறது. பிரசாந்த் பூஷன் தனது தவறுக்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கலாம். இவ்வாறு கேகே வேணுகோபால் தனது வாதத்தை முன்வைத்தார்.

மன்னிப்பு ஏன் கேட்கவில்லை
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருண் மிஸ்ரா கூறுகையில், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று ஒரு வார்த்தையை கூறுவதில் உங்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது. இவ்வாறு கூறி விட்டால் நீங்கள் குற்றவாளி என்று நீங்களே ஒப்புக் கொண்டதாக ஆகிவிடுமா? மன்னிப்பு என்பது ஒரு மாயாஜால வார்த்தை. பல்வேறு காயங்களை ஆற்றக்கூடியது. யாரையாவது நீங்கள் காயப்படுத்தினால் நீங்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்காக அவமானம் என்று எண்ணக்கூடாது.

வேதனை
இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் அளித்துள்ள பதில் சற்றும் பொருந்தாதது. பிரசாந்த் பூஷன் போன்ற ஒரு மூத்த வழக்கறிஞரிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. அவரது பதிலை படித்து பார்த்தால் வேதனையாக இருக்கிறது. அவர் மட்டுமல்ல பெரும்பாலானோர் அப்படித்தான் ஆகிவிட்டார்கள்.நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஊடகங்களை வழக்கறிஞர்கள் சந்தித்து பேசுவது சரியான முன்னுதாரணம் கிடையாது. நீதிமன்றம் போன்ற ஒரு அலுவலகத்தில் இருப்பவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஊடகத்தை சந்தித்துக் கொண்டு இருந்தால், நீங்கள் அதிகமாக அடையாளப்படுத்தப்பட்டுவிடுவீர்களே தவிர உங்களிடம் உரிய காரணம் எதுவும் இருக்காது.

சமூகத்தில் விளைவுகள்
30 ஆண்டுகளாக சட்டத் துறையில் பணியாற்ற கூடிய பிரசாந்த் பூஷன் போன்ற ஒருவர் ஒரு வார்த்தையை சொல்லும் போது அதை மக்கள் நம்ப தொடங்குவார்கள். அவர்கள் எது சொன்னாலும் சரி தான் என்று நினைப்பார்கள். வேறு யாராவது இப்படி பேசி இருந்தால் அதை அப்படியே விட்டு விடலாம். ஆனால் பிரசாந்த் பூஷன் போன்ற ஒருவர் சொல்லும்போது அது சமூகத்தில் விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆக்கபூர்வமான விமர்சனம், பிரச்சினை கிடையாது. ஆனால் அது நீதிமன்றம் என்ற இந்த அமைப்பின் நன்மைக்காக இருக்க வேண்டும். நீங்களும் இந்த அமைப்பில் ஒரு அங்கம். நீங்களே இந்த அமைப்பை அழித்து விட கூடாது. நாம் ஒருவருக்கொருவர் மரியாதை வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நாம் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள நினைத்தால் யார் தான் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை கொள்வார்கள்?

மீடியாவிடம் போக முடியாது
நீதிமன்றம் எதற்காக, என்ன செய்கிறது என்பதை பொறுமையுடன் பாருங்கள். அதைவிடுத்து நீதிமன்ற அமைப்பின் மீது தாக்குதலை தொடுக்காதீர்கள். ஏனெனில், நீதிபதிகள், மீடியாக்களுக்கு சென்று தங்கள் தரப்பு நியாயத்தை பேச முடியாது என்பதை உணருங்கள். இவ்வாறு நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்தார். சுமார் 4 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்ற நிலையில் இறுதிவரை மன்னிப்பு கேட்பது பற்றி பிரசாந்த் பூஷன் தரப்பு எந்த ஒரு உத்தரவாதமும், அளிக்கவில்லை. இதனிடையே தண்டனை விவரத்தை மீண்டும் நீதிபதி அருண் மிஸ்ரா தள்ளி வைத்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications