ஸ்லீப்பர் செல்களுக்கு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தீவிரவாதி பகீர் ஆர்டர்! ரயில்களுக்கு பாதுகாப்பு
டெல்லி: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாக அறியப்படும், பயங்கரவாதி பர்ஹத்துல்லா கோரி, நாடு முழுவதும் ரயில்கள் மீது, இந்து தலைவர்கள் மீதும் கடும் தாக்குதல்களை நடத்த, இந்தியாவில் உள்ள ஸ்லீப்பர் செல்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நாடு முழுவதும் உளவுத்துறை உஷார்படுத்தப்பட்டிருக்கிறது.
பெங்களூரு ஒயிட்ஃபீல்டு அருகே உள்ள புரூக்ஃபீல்டில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி பட்டப்பகலில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதில் 10 பேர் வரை படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதற்காக குண்டு வெடிக்க வைக்கப்பட்டது? தீவிரவாதிகளின் செயலா? வெளிநாட்டு சதியா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

முதலில் பெங்களூர் போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கியது. ஆனால், பின்னர் என்ஐஏ வசம் விசாரணை சென்றது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதியான பர்ஹத்துல்லா கோரி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், பர்ஹத்துல்லா கோரி, இந்தியாவில் உள்ள தனது ஸ்லீப்பர் செல்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நாடு முழுவதும் ரயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும், ரயில்களை கவிழ்க்க வேண்டும் என கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதாவது டெலிகிராம் ஆப் மூலம் இது தொடர்பான வீடியோ ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. வீடியோவில், "அமலாக்கத்துறை மற்றும் என்ஐஏ போன்ற ஏஜென்சிகளால் எங்களது ஸ்லீப்பர் செல்களை பலவீனப்படுத்தி உள்ளன. ஆனால் நாங்கள் பலவீனம் அடையவில்லை என்பதை காட்ட, தாக்குதல் நடத்த வேண்டும். இதன் மூலம் புதிய அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். ரயில்கள், பெட்ரோலிய பைப் லைன்கள் மற்றும் இந்து தலைவர்கள் மீது தாக்குதலை நடத்தி எங்களை நிரூபிப்போம்" என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த வீடியோவில் பிரஷர் குக்கரை கொண்டு வெடிகுண்டு எப்படி தயாரிப்பது என்பதையும் பர்ஹத்துல்லா விளக்கியுள்ளார். இதனையடுத்து நாடு முழுவதும் உளவுத்துறை உஷார்படுத்தப்பட்டு இருக்கிறது.
அபு சுபியான், சர்தார் சாஹாப் மற்றும் ஃபாரு என்று அழைக்கப்படும் ஃபர்ஹத்துல்லா, கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த அக்ஷர்தாம் கோயில் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக அறியப்படுகிறார். இந்த தாக்குதலில் சுமார் 30 பேர் வரை உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்தனர். அதேபோல 2005ம் ஆண்டு ஹைதராபாத்தில், அதிரடிப்படை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலும் இவர் மூளையாக செயல்பட்டிருக்கிறார்.
இவர் பாகிஸ்தானில் இருந்து கொண்டு, சோஷியல் மீடியாக்கள் மூலம் நாச வேலைகளுக்கு ஆட்களை சேர்த்து வருகிறார். இப்படி சேர்க்கப்பட்ட 3 பேரை டெல்லி போலீஸ் சமீபத்தில் கைது செய்து விசாரித்ததில், பர்ஹத்துல்லா வீடியோ தொடர்பான செய்தி வெளியில் தெரிந்திருக்கிறது. இதனையடுத்து உளவுத்துறை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications