எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை.. அமெரிக்காவுடன் சிறந்த ஒப்பந்தம் போட்டு இருக்கோம்! பியூஸ் கோயல் விளக்கம்
டெல்லி: இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளதாகவும் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பிரதமர் மோடிக்கு இன்று நன்றி தெரிவிக்கிறார்கள் என்றும் அமெரிக்க உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் 140 கோடி இந்தியர்களுக்கு பொற்காலம். மக்களை தவறாக வழிநடத்தும் ராகுல் காந்தியின் முயற்சி வெற்றி பெறாது. இந்தியா முன்னேறி கொண்டு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

பியூஸ் கோயல் விளக்கம்
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு பாதகமானது என்றும் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மோடி பணிந்துவிட்டதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் வளர்ச்சி குறித்து ராகுல் காந்திக்கு அக்கறை இல்லை. நாட்டு மக்களை ராகுல் காந்தி தவறாக வழிநடத்துகிறார். அமெரிக்காவுடன் மிகச்சிறந்த ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மூலம் ஏற்றுமதி அதிகரிக்கும்.
மோடிக்கு மக்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்
வரியை அமெரிக்கா குறைத்ததால்தான் அது குறித்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பிரதமர் மோடிக்கு இன்று நன்றி தெரிவிக்கிறார்கள். இந்த ஒப்பந்தத்திற்காகத்தான் நாட்டு மக்கள் பல மாதங்களாக காத்திருந்தார்கள்.
நாட்டு நலன் மற்றும் பொதுமக்களின் நலனை முதன்மையாக முன்னிறுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலுவான இந்தியாவின் எதிர்காலத்தை மேலும் மேம்படுத்தும் வகையிலான இந்த வர்த்தக ஒப்பந்தம், மோடியின் தலைமையில் நேற்று இரவு இறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களை தவறாக வழிநடத்துகிறார்
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் 140 கோடி இந்தியர்களுக்கு பொற்காலம். மக்களை தவறாக வழிநடத்தும் ராகுல் காந்தியின் முயற்சி வெற்றி பெறாது. இந்தியா முன்னேறி கொண்டு இருக்கிறது. உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதில் எதிர்க்கட்சிகளுக்கு ஆர்வம் இல்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காலத்தில் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது. வளர்ச்சியை முடக்கினார்கள். வர்த்தக ஒப்பந்தம் மூலம் சிறுகுறு தொழில்கள், ஆட்டோ மொபைல் துறை, ஜவுளி துறை உள்பட எண்ணற்ற வாய்ப்புகள் இந்த ஒப்பங்கள் மூலம் கிடைக்கும்". என்று கூறினார்.












Click it and Unblock the Notifications