இஸ்லாமிய பெண்களின் ஆதரவை பெற பாஜக கையில் எடுக்கும் அஸ்திரம்.. எம்.பிக்களுக்கு மோடி கொடுத்த ஐடியா
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் சிறுபான்மை மக்களின் வாக்குகளையும் பெறுவதில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி, என்.டி.ஏ எம்.பிக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளாராம்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு முன்பாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.

எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணி என்ற பெயரில் ஓரணியில் திரண்டுள்ளது. இதனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் தேர்தல் கடும் சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது. எனவே இந்த தேர்தல்களை மனதில் வைத்து இரு கூட்டணி கட்சிகளுமே தற்போதே காய் நகர்த்தல்களை தொடங்கியுள்ளது. கட்சியின் நிர்வாகிகள் மாற்றம் உள்பட பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது.
எம்.பிக்களுடன் மோடி ஆலோசனை: அந்த வகையில், பிரதமர் மோடி திங்கள் கிழமை இரவு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த என்.டி.ஏ எம்.பிக்களுடன் இந்த ஆலோசனையை பிரதமர் மோடி மேற்கொண்டார். அப்போது, முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்தது இஸ்லாமிய சகோதரிகளின் வாழ்க்கை பாதுகாப்பை உறுதி செய்ததாகவும் இதை இஸ்லாமிய சகோதரிகளிடம் கொண்டு சேர்த்து ஆதரவு பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்ற எம்.பிக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக எம்.பிக்கள் கூறுகையில், "சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் தொடர்பு கொள்ள வேண்டும். உடனடி முத்தலாக்கை தடை செய்ய பாஜக அரசு முடிவு செய்தது. முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு மிகப்பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. எனவே ரக்ஷா பந்தன் தினத்தன்று சிறுபான்மை சமூக பெண்களையும் தொடர்பு கொண்டு அரசு கொண்டு வந்து இருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்" என்றனர்.
மோடி கூறியது என்ன?: அதேபோல், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியையும் பிரதமர் மோடி விமர்சித்து பேசியதாகவும் இதற்கு முன்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்ததாகவும் ஊழல் கறை படிந்த இந்தக் கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி பேசியதாக எம்.பிக்கள் கூறினர்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்களை 4 பகுதிகளாக பிரித்து அதாவது ஒவ்வொரு குழுவிலும் 40 எம்.பிக்கள் என தனித்தனியாக குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். திங்கள் கிழமை முதல் இரு கூட்டங்கள் நடைபெற்றது. உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதிகளை சேர்ந்த எம்.பிகளையும் பிரதமர் மோடி நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications