"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா?
டெல்லி: இந்தியாவில் இப்போது கேஸ் சப்ளை சிக்கலை எதிர்கொண்டுள்ளது. மத்திய அரசு குடும்பங்களுக்கான சப்ளைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய கிழக்கு மோதலால் கொரோனா போன்ற கட்டுப்பாடுகள் உருவாகியுள்ள சூழலில், இது தொடர்பாகப் பிரதமர் மோடி சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் கடந்த சில வாரங்களாகவே போர் தொடர்கிறது. இதனால் சர்வதேச அளவில் கேஸ் மற்றும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை பெட்ரோல்- டீசலுக்கு சிக்கல் இல்லை. இருப்பினும், வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர் சப்ளையில் சில பல சிக்கல்கள் நிலவுகின்றன.

நரேந்திர மோடி
மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட எல்பிஜி சவால்களை இந்தியா சமாளிக்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்றை கையாண்டு வென்றது போல இந்த சிக்கலையும் நாடு கடந்து விடும் என அவர் குறிப்பிட்டார். NXT உச்சி மாநாட்டில் பேசிய பிரமதர் மோடி, சர்வதேச தடைகள் இந்தியக் குடிமக்களைப் பாதிக்காமல் இருக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக விளக்கினார்.
கொரோனா காலத்தைப் போல
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "140 கோடி இந்தியர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கொரோனா காலத்தைப் போலவே, இந்த நெருக்கடியையும் நாம் சமாளிப்போம். உலகின் பல பகுதிகளில் நிகழும் போர்களால் குடிமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே நமது இலக்கு. எல்பிஜி இருப்பு போதியளவில் உள்ளது. தேவையில்லாத பீதியைத் தூண்டும் முயற்சிகள் நடந்து வருகிறது. மக்கள் கவலைப்படத் தேவையில்லை. கறுப்பு சந்தை மற்றும் பதுக்கலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சீரற்ற சூழலைத் தவறாகப் பயன்படுத்தி லாபம் பார்க்க சில முயல்கிறார்கள். அதைத் தடுக்க கண்காணிப்பு வழிமுறைகளை வலுப்படுத்துமாறு மாநில அரசுகளை நான் கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற காலங்களில் கருப்புச் சந்தையைத் தடுக்க வேண்டும். கேஸ் சிலிண்டர்களை பதுக்குவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் கண்காணிப்பை மேம்படுத்துமாறு மாநில அரசுகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.
எரிசக்தி நெருக்கடி
மத்திய கிழக்கு மோதலால் பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டு எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும், இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. விநியோகச் சங்கிலி தடைகளைச் சமாளிக்க மத்திய அரசு உலகத் தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகளைச் சரி செய்ய நாங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனால் கலப்பு மற்றும் பயோ எரிபொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் பெட்ரோலியச் சார்புநிலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவே இந்தியாவின் நீண்டகால எரிசக்தி உத்தியாக இருக்கும்.
எத்தனால் கலப்பு
2014-க்கு முன்னர், எத்தனால் கலப்புத் திறன் என்பது 1-1.5 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், இன்று பெட்ரோலில் சுமார் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கை நாம் எட்டியுள்ளோம். உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தயார்நிலையை வலுப்படுத்த, இந்தியா பெட்ரோலிய இருப்பு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் பெட்ரோல் இருப்புக்கள் தற்போது 50 லட்சம் டன்களுக்கும் அதிகமாக உள்ளது.. எல்பிஜி இணைப்புகள் 2014ன் 14 கோடியிலிருந்து இப்போது 33 கோடியாக அதிகரித்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் எரிவாயு குழாய் நெட்வொர்க், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையங்கள் மற்றும் எல்பிஜி விநியோக உள்கட்டமைப்பை இந்தியா கணிசமாக மேம்படுத்தியுள்ளது. உலக சவால்கள் இருந்த போதிலும், இந்தியா தொடர்ந்து உறுதியுடனும் வேகத்துடனும் முன்னேறி, உலக வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாகத் திகழ்கிறது. உலகம் இப்போது ஒரு கடினமான காலகட்டத்தைச் சந்தித்துள்ளது. ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்பை இந்தியா அதைத் திறம்படக் கையாண்டு வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications