பிளாக் மேஜிக் அது இதுன்னு பேசாம, மக்கள் பிரச்சினைக்கு பதில் சொல்லுங்க: மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
டெல்லி: பிளாக் மேஜிக் போன்ற மூட நம்பிக்கைகள் சார்ந்த வார்த்தைகள் பயன்படுத்துவதை விடுத்து, மக்கள் பிரச்னைகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் கறுப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர். இது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

அமித் ஷா கருத்து
காங்கிரஸ் கட்சியின் கறுப்பு சட்டை போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை எதிர்க்கவே, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய அதே நாளில் வேண்டுமென்றே கருப்பு உடை அணிந்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது என்று குற்றம்சாட்டினார். இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி
இந்த நிலையில் ஹரியானா மாநிலம் பானிபட்டில் ரூ.900 கோடி மதிப்பிலான இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சிலர் விரக்தியில் பிளாக் மேஜிக்கை நாடுகிறார்கள். பிளாக் மேஜிக்கை அவர்கள் பிரசாரம் செய்ய முயற்சித்ததை ஆகஸ்ட் 5ம் தேதி பார்த்தோம்.

பிளாக் மேஜிக்
கறுப்பு ஆடை அணிவதன் மூலம் கடினமான காலத்தை கடந்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், எவ்வளவு பிளாக் மேஜிக் செய்தாலும், மூடநம்பிக்கைகளை நம்பினாலும், மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியையும் அவர்களின் போராட்டத்தையும் மறைமுகமாக சாடினார்.
Recommended Video

ராகுல் காந்தி
இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டில் நிலவி வரும் பணவீக்கமும், வேலையில்லா திண்டாட்டமும் தெரியவில்லை.
கறுப்பு சுரண்டலை மறைக்க, பிளாக் மேஜிக் போன்ற மூட நம்பிக்கை வார்த்தைகள் பயன்படுத்தி, பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைப்பதையும், நாட்டை தவறாக வழி நடத்துவதையும் பிரதமர் மோடி நிறுத்த வேண்டும். முக்கிய பிரச்னைகளுக்கு பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது ட்வீட் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினராலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications