இந்திராவின் சாதனையை சமன் செய்யும் பிரதமர் மோடி.. ஆகஸ்ட் 15ல் காத்திருக்கும் சம்பவம்! பாஜகவினர் உற்சாகம்
டெல்லி: 1947 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றோம். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை சமன் செய்ய உள்ளார்.
ஆங்கிலேயர்களை விரட்டி நாம் சுதந்திரம் பெற்ற தினம் ஆகஸ்ட் 15. 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நாம் சுதந்திரம் பெற்றோம். அன்று முதல் சுதந்திர இந்தியாவாக நாம் செயல்பட்டு வருகிறோம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை நாடு முழுவதும் நாம் கொண்டாடி வருகிறோம்.

அந்த வகையில் நாளை மறுநாள் நம் நாட்டின் 78 வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்ள உள்ளார். அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த முதல்வர்கள் தேசியக்கொடி ஏற்ற உள்ளனர். சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
இந்நிலையில் தான் நாளை மறுநாள் பிரதமர் மோடி மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளான மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை சமன் பெற்ற உள்ளார். அதாவது இந்திரா காந்தி 1966 முதல் 1977 வரையும், அதன்பிறகு 1980 முதல் 1984 வரையும் பிரதமராக 16 முறை சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி உள்ளார்.
இதில் 11 முறை அவர் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி உள்ளார். இந்திரா காந்தி கடந்த 1966 முதல் 1977 வரை பிரதமராக இருந்தபோது இந்த சாதனையை படைத்தார். அதன்படி பார்த்தால் நரேந்திர மோடி கடந்த 2014 முதல் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராகி உள்ளார். கடந்த 2014, 2019, 2024 நாடாளுமன்ற தேர்தல்கள் மூலம் அவர் பிரதமராகி உள்ளார். இதுவரை 10 முறை அவர் தேசியக்கொடி ஏற்றி வைத்த நிலையில் நாளை மறுநாள் தொடர்ந்து 11வது முறையாக தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
இதன்மூலம் நம் நாட்டில் பிரதமராக தொடர்ந்து 11வது முறையாக தேசியக்கொடி ஏற்றியவர்கள் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு மகள் இந்திரா காந்தியின் சாதனையை நரேந்திர மோடி சமன் செய்ய உள்ளார். இதனால் பாஜகவினர் உற்சாகமாகி உள்ளனர்.
மேலும் நாளை மறுநாள் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றுவதன் மூலம் பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பின்னுக்கு தள்ள உள்ளார். இவர் 10 முறை தேசியக்கொடி ஏற்றி வைத்துள்ள நிலையில் பிரதமர் மோடி 11வது முறையாக தேசியக்கொடி ஏற்றி மன்மோகன் சிங் சாதனையை முந்துகிறார். மேலும் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி புதிய ரெக்கார்ட்டை படைத்துள்ளார்.
நம் நாட்டில் இதுவரை இருந்த பிரதமர்களில் நீண்ட நேரம் பேசியவர் என்ற பெருமை பிரதமர் மோடியிடமே உள்ளது. இவர் சராசரியாக 82 நிமிடங்கள் வரை பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதுமட்டுமின்றி பிரதமர் மோடியின் நீண்ட நேர பேச்சு என்பது கடந்த 2016ல் அரங்கேறியது. அன்று அவர் மொத்தம் 94 நிமிடங்கள் வரை பேசினார். அதேபோல் குறைந்த நேர பேச்சு என்பது கடந்த 2017 ல் பதிவு செய்யப்பட்டது. அப்போது பிரதமர் மோடி 55 நிமிடங்கள் வரை பேசியிருந்தார்.
இந்தியாவை பொறுத்தவரை சுதந்திர தினவிழாவில் பிரதமராக அதிகமுறை தேசியக்கொடி ஏற்றியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் ஜவஹர்லால் நேரு உள்ளார்.இவர் பிரதமராக தொடர்ந்து 17 முறை தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன்பிறகு 2வது இடத்தில் இந்திரா காந்தி உள்ளார். இவர் 11 முறை தொடர்ச்சியாக தேசியக்கொடி ஏற்றியது உள்பட 16 முறை சுதந்திர தினவிழாவில் பிரதமராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தான் இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி ஆகஸ்ட் 15ல் சமன் செய்ய உள்ளார்.












Click it and Unblock the Notifications