பற்றி எரிந்த டெல்லி! காங்., அலுவலகத்தில் நுழைந்து போலீஸ் தாக்குதல் நடத்தியதா? உயரதிகாரி விளக்கம்
டெல்லி: டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நுழைந்து போலீசார் தாக்கியதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டிய நிலையில் இதுதொடர்பாக டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு தொடர்பான பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக இருவருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சோனியாகாந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராகுல்காந்தி மட்டும் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.

3வது நாளாக போராட்டம்
இன்று 3வது நாளாக ராகுல்காந்தி அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இதற்கிடையே காங்கிரஸ் சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் முதல் இன்று வரை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன்பு அக்கட்சியினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

டயர்களுக்கு தீவைப்பு
அசம்பாவித சம்பவங்களை தடுக்க 144 தடை உத்தரவு மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட்சியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர். போலீசார், துணை ராணுவத்தினர் காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்ய கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அமலாக்கத்துறை அலுவலகம் அருகே டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் டெல்லி போராட்டக்களமாக மாறியது.

குண்டுக்கட்டாக கைது
இதற்கிடையே, தொண்டர்களான போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயப்படுத்தி குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். எம்பி, எம்எல்ஏக்களை காங்கிரஸ் அலுவலகத்துக்குள் அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். காங்கிரஸ் அலுவலகத்தை சுற்றி இரும்பு தடுப்புகள் வைத்து தடுக்கப்பட்டதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகள் தள்ளப்பட்டன. இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அலுவலகத்தில் நுழைந்து தாக்குதல்
இந்நிலையில் தான் அலுவலகத்தில் நுழைந்து காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆதீர் ரஞ்சன் ஜோதி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், ‛‛டெல்லி போலீஸ் பாஜகவின் மிலிட்டரி போல் செயல்படுகிறது. இந்தியாவின் பழமையான கட்சியாக உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைவது என்பது நாட்டின் ஜனநாயக அமைப்பில் படிந்த கறையாகும். இந்திய மக்களுக்கு எதிரான பாசிச போக்கை அனைவரும் பார்த்து கொண்டிருக்கின்றனர் என்பதை பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

அலுவலகத்துக்குள் நுழையவில்லை
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் விவாதப்பொருளானது. இந்த குற்றச்சாட்டை டெல்லி போலீசார் முற்றிலுமாக மறுத்துள்ளனர். இதுபற்றி சட்டம் ஒழுங்கு பிரிவு போலீஸ் உயரதிகாரி ஹூடா கூறுகையில், ‛‛காங்கிரஸ் அலுவலகம் அருகே போலீசார் மீது சிலர் தடுப்புகளை வீசியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் போலீசார் காங்கிரஸ் அலுவலகத்துக்குள் நுழைந்து தடியடி எதுவும் நடத்தவில்லை. போலீசார் எந்த சிறப்பு படையையும் பயன்படுத்தவில்லை.'' என்றார்.












Click it and Unblock the Notifications