மோடி, அமித்ஷாவுக்கு மணிப்பூர் இந்தியாவின் ஒரு மாநிலமே இல்லை-லோக்சபாவில் ராகுல் காந்தி பொளேர் தாக்கு!
டெல்லி: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு மணிப்பூர் இந்தியாவின் ஒரு மாநிலமே இல்லை; மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை? என லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பி விமர்சித்தார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி மணிப்பூர் பற்றி பேசியதாவது: பிரதமர் மோடி மணிப்பூர் மாநில பிரச்சனை பற்றி பேசுவதும் இல்லை. மணிப்பூருக்கு செல்லவும் இல்லை. மணிப்பூர் மாநிலத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதா? மணிப்பூரில் உள்நாட்டு யுத்தம் நடக்கவில்லையா?

மணிப்பூர் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மணிப்பூர் நாட்டின் ஒரு மாநிலமே, இந்தியாவின் ஒரு மாநிலமே இல்லை. மணிப்பூர் இந்தியாவின் ஒரு மாநிலமா? இல்லையா? என பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்.
மத்திய பாஜக அரசின் கொள்கைகளால்தான் மணிப்பூரில் வன்முறைகள் வெடித்தன. மணிப்பூர் வன்முறைக்கு மத்திய அரசுதான் காரணம். மணிப்பூரில் உள்நாட்டு யுத்தம் நடப்பதற்கு மத்திய அரசின் கொள்கைகள்தான் காரணம். பாஜகவின் அரசியல்தான் காரணம். இவ்வாறு மணிப்பூர் குறித்து ராகுல் காந்தி பேசினார்.
முன்னதாக, எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமே அல்ல. சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பதே வன்முறையின் சின்னம் அல்ல. மாறாக அகிம்சையின் சின்னம். பிரதமர் மோடிதான் கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார்; கடவுளுடன் நேருக்கு நேர் பேசிக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி கடவுளின் அவதாரம். மகாத்மா காந்தியை ஆவணப் படம் மூலமே உலகம் அறிந்ததாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மோடி வேண்டுமானால் ஆவணப்படம் மூலம் மகாத்மா காந்தியடிகளை அறிந்திருக்கலாம். ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்?
அயோத்தியில் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு உள்ளூர் மக்களை அழைக்கவில்லை. ஆனால் அம்பானியை அழைத்தனர். ஒட்டுமொத்த இந்துக்களும் பாஜகவோ, பிரதமர் மோடியோ பிரதிநிதி அல்ல. பாஜக 24 மணிநேரமும் வெறுப்பையே பரப்புகிறது. இந்து மதம் வெறுப்பை போதிக்கவில்லை. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள்தான் பாஜகவினர். வன்முறை செய்கிற இந்துக்கள்தான் பாஜகவினர். இந்துக்கள் வன்முறையை விரும்பாதவர்கள். ஆனால் பாஜகவினரோ அதற்கு நேர் எதிராக உள்ளனர். இந்தியா என்ற கருத்தியலே கடும் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது. அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலை மக்கள்தான் பாதுகாத்துள்ளனர். பிரதமர் மோடியின் உத்தரவால் என் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இன்றும் பல தலைவர்கள் சிறையில் உள்ளனர். அமலாக்கத்துறையால் 55 மணிநேரம் விசாரணைக்குள்ளாக்கப்பட்டேன். அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டேன். என் எம்பி பதவியை பறித்தனர்; என் எம்பி இல்லத்தை பறித்தனர் எனவும் ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications