இந்த இரண்டு விஷயங்களிலும்.. பிரதமர் மோடி 24 கேரட்டால் ஆன சுத்த தங்கம்.. ராஜ்நாத் சிங் புகழாரம்
டெல்லி: ஒரு உண்மையான தலைவர் என்பவர் அவரது நோக்கம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில்தான் அடையாளம் காணப்படுவார். இந்த இரண்டு விஷயங்களிலும் பிரதமர் மோடி 24 கேரட் தங்கம் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டி உள்ளார்.
'அரசின் தலைவராக நரேந்திர மோடியின் 20 ஆண்டுகாலம் குறித்த ஆய்வு' என்ற தேசிய அளவிலான கருத்தரங்கின் நிறைவுவிழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ஒரு உண்மையான தலைவர் என்பவர் அவரது நோக்கம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில்தான் அடையாளம் காணப்படுவார். இந்த இரண்டு விஷயங்களிலும் பிரதமர் மோடி 24 கேரட் தங்கம்.

மோடிக்கு புகழாரம்
20 ஆண்டுகளாக அரசுக்கு தலைமை வகித்தபோதும், ஊழலின் ஒரு சிறு கறை கூட அவர் மீது கிடையாது. கடந்த 20 ஆண்டுகளில் மோடியின் அரசியல் பயணத்தைக் கவனித்தால், அவருக்கு அடுத்தடுத்து சவால்கள் வந்து கொண்டிருந்ததை காணலாம். அவர் அந்த சவால்களை எதிர்கொண்ட விதத்தை நிர்வாகவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடமாக கற்பிக்க வேண்டும். ஒரு திறமையான தலைமை, திறன்மிக்க நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக காட்ட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

ஜனநாயகத்தை மீட்டவர்
இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரதமர் மோடியை அண்மையில் வெகுவாக புகழ்ந்தார். இதுபற்றி அவர் கூறும் போது, 2014 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயகம் வீழவிருந்தது. அதை வீழ்ச்சியில் இருந்து மீட்டவர் பிரதமர் மோடி. இந்திய மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்து பாஜக ஆட்சியைக் கொண்டுவந்தனர். மோடி தற்போது நல்லாட்சி வழங்கி வருகிறார் என்று கூறினார்,

பாஜக ஏன் பெரும்பான்மை
டெல்லியில், ஜனநாயகத்தை வழங்குதல்: அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் 20 ஆண்டுகளாக நரேந்திர மோடி (National Conference of 'Delivering Democracy: Two decades of Narendra Modi as head of government') என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கடந்த இரண்டு நாளைக்கு முன்பு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 2014 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் பாஜகவுக்கு பெரும்பான்மையை வழங்கினர். அப்போது தேசத்தில் ஜனநாயகக் கட்டமைப்பு எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்துவிடலாம் என்ற நிலையில் காணப்பட்டது, நம் தேசத்தில் கொள்கை முடக்கம் நிலவியது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் மாண்பு குறைந்து கொண்டிருந்தது. ஊழல் மலிந்த நாடாக இந்தியா காணப்பட்டது. 12 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்திருந்தது. நாள்தோறும் ஊழல்மயமாக இருந்தது. அப்போது தான் மக்கள் பாஜகவுக்கு பெரும்பான்மை அளித்து ஆட்சியில் அமர வைத்தார்கள்

பல கட்சி ஆட்சி
மக்களுக்கு பல கட்சிகள் சேர்ந்து நடத்தும் ஆட்சி முறை மீது சந்தேகம் வந்தது. மகாத்மா காந்தி உருவாக்கிய ராம் ராஜ்யா அல்லது கல்யாண் ராஜ்யா (மக்கள் நல அரசு) என்ற வார்த்தைகளின் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பல கட்சிகள் கொண்ட ஓர் அரசால் அதனைக் கொடுக்க முடியாது என்று மக்கள் முடிவு செய்தனர். அதனால் தான் அவர்கள் பொறுமையுடன் ஒரு நல்ல முடிவு எடுத்து பாஜகவை ஆட்சியில் அமர வைத்தனர்.

தேச நலனை பாதுகாக்கிறார்
முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கொள்கை அல்லாத ஒரு கட்சிக்கு முழு சுதந்திரத்துடன் ஆட்சி செய்ய மக்கள் அதிகாரம் வழங்கினர். மோடி குஜராத் முதல்வராக 2001ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து 20 ஆண்டு காலம் பொதுச் சேவையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். நிர்வாகத் துறையில் அவர் ஏதும் பட்டம் பெறவில்லை. ஆனாலும் அவரது நிர்வாகத்தில் குஜராத் மேம்பட்டது. அதன் பின்னர் பிரதமரானார். இப்போது தேசத்தின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். மனிதாபிமான அடிப்படையிலும் தேச நலனை அணுகுகிறார், பாதுகாப்பு பார்வையிலும் தேச நலனைக் காக்கிறார். தேவையுள்ளவர்களும் உதவிக்கரம் ஒருபுறம், தேவைப்படும்போது துல்லியத் தாக்குதல் மறுபுறம் என செயல்படுகிறார் என்று அமித்ஷா பாராட்டினார்.












Click it and Unblock the Notifications