தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - ஜன.12ல் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்கிறார்
தமிழகத்தில் புதிய மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளதாகவும் விருதுநகரில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் புதியதாக 13 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க கடந்த அதிமுக ஆட்சியின்போது மத்திய அரசின் விண்ணப்பம் செய்திருந்தது. ராமநாதபுரம் , விருதுநகர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர் நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் புதிதாக கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
கடந்த 2020-21-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்டுவதற்கு 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளையும் நிறுவுவதற்கு தமிழக அரசுக்கு மத்திய அரசும் அனுமதி அளித்திருந்தது.

புதிய மருத்துவக் கல்லூரிகள்
புதியதாக உருவாக்கப்பட உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான மதிப்பீடு 3,575 கோடி ரூபாய் ஆகும். மேலும் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு தனது பங்காக ரூ.2,145 கோடி நிதியுதவி செய்ய முன்வந்துள்ளதாக 2020ம் ஆண்டு அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கா் தெரிவித்திருந்தார். அதாவது இந்தக் கல்லூரிகள் 60 சதவீதம் மத்திய அரசின் பங்கையும் 40 சதவீதம் மாநில அரசின் பங்கையும் கொண்டிருக்கும்.

மத்திய அரசு ஒப்புதல்
தற்போது ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசு இந்த கல்லூரிகளை விரைவாக திறந்து வைக்க முயற்சி மேற்கொண்டது. கடந்த அக்டோபர் மாதம் இது தொடர்பாக பேட்டி அளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில், 4 கல்லூரிகளில் கூடுதலாக 600 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

மாணவர்கள் எண்ணிக்கை
கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் வீதம், கூடுதலாக 600 மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

கூடுதல் இடம் எவ்வளவு
தமிழ்நாட்டில் தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் மொத்தம் 3,350 மருத்துவ இடங்கள் உள்ளன. தற்போது புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாவதன் மூலம் கூடுதலாக 1,408 மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கும். தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை 9,100 ஆக அதிகரித்துள்ளதாகவும், நாட்டிலேயே இந்த எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

ஜனவரி 12ல் மோடி வருகை
இந்நிலையில் தமிழ்நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12ம் தேதி சென்னை வருகிறார். இந்த தகவலை தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. தமிழகம் வரும் பிரதமர் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

மோடியுடன் ஸ்டாலின்
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பின்னர் முதன் முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. பிரதமரின் தமிழக பயணத்திட்டம் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications