ரிசல்ட் வரட்டும் அப்போ பாருங்க.. சவுத்தில் சவால் விடும் பாஜக..கன்பார்ம்! ஏக குஷியில் பிரதமர் மோடி..!
டெல்லி: பாஜக எப்போதும் வடமாநிலங்களிலேயே வெல்லும் என்ற பேச்சை அடித்து நொறுக்கும் வகையில் இந்த தேர்தலில் தென் மாநிலங்களில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறுவதோடு வாக்கு சதவீதமும் அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது இரண்டு கட்ட வாக்குப்பதிவும் நிறைவு பெற்றிருக்கிறது. இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் பாஜக காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி: செல்லும் இடங்களில் எல்லாம் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் எனக் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தென் மாநிலங்களில் பாஜக வெற்றி அடைவதில்லை என்ற பேச்சை மாற்றி அமைப்போம் என உறுதியாகப் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர்,"பாஜகவுக்கு வாக்களிப்பது நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அளிக்கும் வாக்கு என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்து இருக்கிறார்கள். இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான தோல்வியை சந்திக்கப் போகிறார்கள்.
400 தொகுதிகள்: 400 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என நாங்கள் இலக்கு வைக்க காரணம், தாழ்த்தப்பட்ட மக்கள் மலைவாழ் இன மக்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டவர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்பதற்காகத்தான். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றி விடுகிறார்கள் என எதிர்க்கட்சியினர் அடிக்கடி பேசி வருகின்றனர். அப்படி சொல்பவர்கள் நான் குஜராத்தில் முதலமைச்சராக இருந்ததிலிருந்து தற்போது வரை என்ன செய்திருக்கிறேன் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
காங்கிரஸின் இளவரசர்: ஆதாரம் இல்லாமல் என் மீது குற்றச்சாட்டுகளை சொல்லக்கூடாது. மக்களின் மனநிலையை பாஜக எப்போதும் பிரதிபலித்து வருகிறது அதில் மக்கள் இன்னும் மாற்றம் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதை நாங்கள் நிச்சயமாக செய்வோம். பாஜக தோற்கும் என காங்கிரஸின் இளவரசர் சொல்லுகிறார். உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால் தான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் சென்று விட்டனர்.
நல்ல வரவேற்பு: தென்னிந்தியாவில் இந்த முறை பாஜகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தென்னிந்தியாவில் நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆதரவை அன்பு மழையை பொழிந்து வருகின்றனர். தென்னிந்தியாவில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளின் ஆட்சியை மக்கள் பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் அந்த மக்களை தவறாக வழி நடத்துவதையும் பிரிவினைவாத அரசியல் செய்வதையும் உணர்ந்துள்ளார்கள். மொத்தத்தில் தென் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள மாநில கட்சிகள் ஊழல் செய்வதையே முதன்மையாக கொண்டுள்ளனர்.
தென்னிந்தியாவில் வெற்றி: தென் மாநிலங்களில் பாஜகவை மக்கள் நம்பத் தகுந்த மாற்று சக்தியாக ஏற்கத் தொடங்கியுள்ளனர். தென்னிந்தியாவில் பாஜக மிகப் பெரும் தனிப்பெரும் கட்சியாக கடந்த தேர்தலில் திகழ்ந்தது. இந்த தடவை தென்னிந்தியாவில் அதிக வெற்றி பெறும் கட்சியாக பாஜக திகழும். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறும். இந்த தடவை தென்னிந்திய தேர்தல் முடிவுகள் பல பாரம்பரிய கட்டுக்கதைகளுக்கு முடிவு கட்டுவதாக இருக்கும். தென்னிந்தியாவில் இந்த தடவை பாஜகவுக்கு வாக்கு வங்கியும் கணிசமாக அதிகரிக்கும். தேர்தல் முடிவு வெளியாகும் போது அதை நீங்களே பார்ப்பீர்கள்" என நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications