“அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ் என்னை ஜெய்பீம் என சொல்ல சொல்கிறது!” - பிரதமர் மோடி
டெல்லி: அம்பேத்கருக்கு பாரதரத்னா வழங்காத காங்கிரஸ் என்னை ஜெய்பீம் என சொல்ல சொல்கிறது என பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அக்கட்சியை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரையின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியிருந்த எதிர்க்கட்சி எம்பிக்கள், பாஜக குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தனர். இதனையடுத்து இன்று குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அதில், “குடியரசுத் தலைவரின் உரை சிறப்பானதாகவும், அனைவருக்குமானதாகவும் இருந்தது. ஆனால் அனைவருக்கும் வளர்ச்சி என்பதை மட்டும் சிலரால் புரிந்து கொள்ள முடியவே முடியாது. குடும்ப நலனே முக்கியம் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் மாடல். இதற்கு நேர் மரியாதை தான் பாஜகவின் மாடல். எங்களுக்கு எப்போதுமே தேசத்தின் நலம் தான் முக்கியம். எனவேதான் மக்கள் எங்களுக்கு பெருவாரியான ஆதரவை அளித்திருக்கிறார்கள்.
எங்களை மூன்றாவது முறையாக தேர்வு செய்ததும் வளர்ச்சி மீதான நம்பிக்கை தான். காங்கிரஸ் கட்சி குடும்ப நலன் முக்கியம் என்று தான் செயல்பட்டு வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை காங்கிரஸ் கட்சியால் யோசித்துக் கூட பார்க்க முடியாது. ஏனெனில் அது அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது.
இன்று என்னை ஜெய் பீம் என்று உச்சரிக்க சொல்லி கேட்கும் காங்கிரஸ் கட்சி தான் அன்று அம்பேத்கரின் நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டது. இரண்டு முறை அம்பேத்கரை தேர்தலில் தோற்கடிக்க அனைத்து வேலைகளையும் காங்கிரஸ் செய்திருந்தது. பிறரை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் பணி. இதனால்தான் கூட்டணியினர் கூட காங்கிரசை விட்டு விலகி செல்கின்றனர்” என்று விமர்சித்துள்ளார். மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது பாஜகதான். புதிய நாடாளுமன்றத்தின் முதல் முடிவாக இரு அவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீட்டை பாஜக உறுதி செய்தது” என்று பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications
