அடேங்கப்பா.. எடுத்த எடுப்பிலேயே பிரியங்கா காந்திக்கு இப்படி ஒரு சவாலா!
டெல்லி: உத்தரபிரதேச கிழக்கு மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி பொறுப்புள்ளதன் மூலம், அரசியலில் தனது காலடியை எடுத்து வைத்துள்ளார்.
பிரியங்கா காந்திக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு லேசானது கிடையாது. எளிதாக இதை எடுத்துக்கொள்ளவும் முடியாது.
உத்தரபிரதேசம் என்பது லோக்சபா தேர்தலில் எந்த கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யக்கூடிய முக்கியமான மாநிலம். மொத்தம் 80 தொகுதிகள் இந்த ஒரே மாநிலத்தில் அமைந்துள்ளது என்பது இதற்கு முக்கியமான காரணம்.

வெற்றிக்கு உ.பி. தேவை
கடந்த முறை பாஜக இங்கு நல்ல வாக்கு அறுவடை செய்து, 'க்ளீன் ஸ்வீப்' என்பார்களே ஏறத்தாழ அப்படியான வெற்றியாகும். 71 தொகுதிகளை வாரிச் சுருட்டியது பாஜக. எனவேதான், இம்முறை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதி கட்சியும் உத்தரபிரதேசத்தில் கூட்டணி அமைத்து பாஜகவை எதிர்க்க முடிவு செய்துள்ளன.

கூட்டணி
பாஜக மற்றும் மாயாவதி-அகிலேஷ் கூட்டணி நடுவேயான போட்டியில், காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதை உணர்ந்துதான், உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். இந்த மாநிலத்தில் கணிசமான தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால்தான், பிரதமர் பதவிக்கான ரேஸில் மாயாவதி, மமதா பானர்ஜி போன்றோரை, ராகுல் காந்தி முந்த முடியும்.

ஜாம்பவான்கள்
அதேநேரம், உத்தர பிரதேசத்தில், பிரியங்கா காந்திக்கு கடும் சவால் காத்துள்ளது மட்டும் உண்மை. அவர், பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகிய பல களம் கண்ட ஜாம்பவான்களை எதிர்த்து களமாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு வகையில் இது அக்னி பரிட்சையாகும். 24 மாவட்டங்களை உள்ளடக்கிய உத்தர பிரதேச பகுதிதான் பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.

மோடி தொகுதி
பிரியங்கா காந்தி பொறுப்பாளராக உள்ள கிழக்கு உத்தரபிரதேசத்தில்தான், பிரதமர் மோடியின் வாரணாசி லோக்சபா தொகுதி உள்ளது. அங்கு இவர் மோடியை வீழ்த்த வியூகம் வகுக்க வேண்டியுள்ளது. அது மட்டுமா, யோகி ஆதித்யநாத்தின் வலுவான கோட்டையாக வர்ணிக்கப்படும் அவர் முன்னாள் வகித்து வந்த கோரக்பூர் லோக்சபா தொகுதியும் இங்கேதான் உள்ளது.

முதல் பொறுப்பு
மாயாவதி கட்சியின் கோட்டையான, அம்பேத்கர் நகர் மாவட்டம், முலாயம்சிங் யாதவ் கோலோச்சும், ஆசாம்கர் மாவட்டம் ஆகியவையும், உத்தர பிரதேசத்தின் கிழக்கு மாவட்டத்தில் வரக்கூடியவையாகும். தேர்தல் அரசியலில் பழம் சாப்பிட்டு கொட்டை போட்ட இவ்வளவு பெரிய ஜாம்பவான்களை எதிர்கொண்டு காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பு, பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications