யார் ஜெயிப்பாங்கன்னு நாளைக்கு தெரியும்.. நீங்களே பாருங்க! குஜராத் தேர்தல் பற்றி பகவந்த் மான் ஆரூடம்
டெல்லி: டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற நிலையில், குஜராத் தேர்தலிலும் கருத்துக்கணிப்பை பொய்யாக்கி கட்சி வெற்றிவாகை சூடும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் டிசம்பர் 4ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இங்கு கடந்த 15 ஆண்டுகளாக பாஜகதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
இந்த தேர்தல் முடிவுகளை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பஞ்சாப் முதலமைச்சர் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார்.
டெல்லி மாநகராட்சி தேர்தல்! உலகின் மிகப்பெரிய கட்சியை தோற்கடித்துள்ளோம்! மணீஷ் சிசோடியா பெருமிதம்!

வெற்றி
அவர் மேலும் கூறியதாவது, "கணிப்புகளை கடந்து யதார்த்தத்தில் வெற்றி எங்களுக்கு சாத்தியமாகியுள்ளது. முதலில் காங்கிரசின் 15 ஆண்டுக்கால ஆட்சியை ஆம் ஆத்மி வேரோடு பிடுங்கி எறிந்தது. இதனையடுத்து டெல்லி உள்ளாட்சியில் கடந்த 15 ஆண்டுக்கால பாஜக ஆட்சியை கட்சி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. மக்கள் வெறுப்பு அரசியலை விரும்பவில்லை. அவர்கள் மருத்துவம், சுகாதாரம் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால்தான் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள். இந்த வெற்றி தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நான் கலந்துரையாடியுள்ளேன். இனி டெல்லி தூய்மையாகிவிடும்" என்று கூறியுள்ளார். டெல்லியில் மொத்தம் 250 மாநகராட்சி தொகுதிகள் இருக்கின்றன.

டெல்லி
இதில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 181 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. இதற்கடுத்து ஆம் ஆத்மி 48 தொகுதிகளையும் காங்கிரஸ் 30 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. பாஜகவை பொறுத்த அளவில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் பெரும்பான்மை பெற 126 தொகுதிகளை கைப்பற்றி இருக்க வேண்டும். அந்த வகையில் ஆம் ஆத்மி கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் காங்கிரஸின் நிலைதான் படுமோசமாகிவிட்டது. இம்முறை வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் இல்லாமல் போய்விடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

கருத்து கணிப்புகள்
இது ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் நாளை குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. கருத்துக்கணிப்புகளை பொறுத்த அளவில், பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆம் ஆத்மி இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்ட பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், "இந்த தேர்தலில் பாஜக தனது முழு பலத்தை பயன்படுத்தி ஆம்ஆத்மியை தடுக்க நினைத்தது. ஆனால், நாளை முடிவுகள் வெளியாகும்போது பத்திரிகையாளர்களாகிய உங்களுடன் நான் இருப்பேன். முடிவுகள் ஆச்சரியமானதாக இருக்கும். கருத்துக்கணிப்புகள் பொய்யாக்கப்படும். நான் வெற்றியை கட்சி அலுவலகத்தில் நாளை கொண்டாடிக்கொண்டிருப்பேன்.

குஜராத்
அதேபோல எங்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெரும் வேட்பாளர்கள் எங்கள் கட்சியிலேயே இருப்பார்கள். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் விற்பனைக்கல்ல" என்றும் கூறியுள்ளார். குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 181 இடங்களில் ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இதில் பாஜக வெற்றி பெற்றால் 7வது முறையாக ஆட்சி அமைக்கும். ஆனால் கடந்த தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையில் வெறும் 10%தான் வாக்கு வித்தியாசம் இருந்தது. ஆனால் இம்முறை ஆம் ஆத்மியும் களத்தில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவியது. மேலும், காங்கிரசுக்கான வாக்கு வங்கியை ஆம் ஆத்மி முழுமையாக கைப்பற்றும். இங்கு வெற்றி பெற 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.